பதிவு செய்த நாள்
21
நவ
2016
10:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான, பந்தக்கால் நடும் விழா நேற்று நடந்தது. திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோவிலில், 2002ல் கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்படுவதால், 2015 ஜன., 26ல் பாலாலயத்துடன் பணி துவங்கி, தற்போது நிறைவு பெற்றுள்ளது. வரும், 2017 பிப்., 6ல், கும்பாபிஷேகம் நடத்த, நேற்று முன்தினம் அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, நேற்று, கோவிலில் பந்தக்கால் நடும் முகூர்த்த விழா நடந்தது.சம்பந்த விநாயகர் சன்னிதியில், பந்தக்காலுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. மேலும், அருணாச்சலேஸ்ரவர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, ஐந்தாம் பிரகாரத்தில், ஹாலாசிநாத குருக்கள் தலைமையில், சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, கும்பாபிஷேக பந்தக்கால் நடப்பட்டது. பின், யாகசாலை பூஜை அமைப்பதற்கான பணி துவங்கியது. விரைவில், பத்திரிகை அடித்தல், கும்பாபிஷேகம் நடத்த சாரம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடக்க உள்ளன.