பதிவு செய்த நாள்
21
நவ
2016
10:11
திருச்சி: தமிழகத்தில், முதல் முறையாக, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம், காணிக்கை செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு, தினமும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து, பல ஆயிரம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். புரட்டாசி சனி, ஏகாதசி, ஊஞ்சல் உற்சவம் உள்ளிட்ட விசேஷ நாட்களில், பல லட்சம் பக்தர்கள் வருகின்றனர்.இவர்கள், இந்திய ரூபாய் மட்டு மின்றி, வெளிநாட்டு கரன்சிகள், தங்கம், வெள்ளி போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்துகின்றனர். இதற்காக, தாயார் சன்னிதி, ஆண்டாள் சன்னிதி, சக்கரத்தாழ்வார் சன்னிதி உட்பட, 42 இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. தற்போது, கிரெடிட், டெபிட் கார்டுகள் கொண்டு வரும் பக்தர்கள், அதன்மூலம் காணிக்கை செலுத்தும் வகையில், கோவில் வளாகத்தில் கருட மண்டபத்தில், ஸ்டேட் பேங்க் சார்பில், டிபாசிட் இயந்திரம் என்ற, இ - உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.இந்த இயந்திரத்தில், ரூபாய் நோட்டுகளை காணிக்கையாக செலுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த, இ--உண்டியல், விரைவில் பக்தர்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படுகிறது.