கீழக்கரை: சேதுக்கரை அருகே வானர சேனைகள் அமைத்த பாறை பாலத்தை நேரில் சென்று பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், வெளிமாநிலங்களிலிருந்து வரும் யாத்ரிகர்கள் கடற்கரையில் நின்றவாறு பாலம் அமைந்துள்ள இடத்தை வணங்கி செல்கின்றனர். ராமநாதபுரம் சேதுக்கரை கடற்கரை, ராமாயண இதிகாசத்துடன் தொடர்புடையதாகும். மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள சேதுக்கரை சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சனேயர் கோயிலுக்கு தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து தினமும் ஏராளமான யாத்ரீகர்கள், சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து செல்கின்றனர். சீதையை மீட்பதற்காக சேதுக்கரை கடற்கரையில் இருந்து இலங்கை ராவணன் கோட்டை வரை சேதுபாலம் அமைக்கப்பட்டதாக புராணங்கள் மூலம் தெரியவருகிறது.
சேதுபந்தனம் எனப்படும் வெண்பாறையால் ஆன பாலத்தை நளன், அங்குதன், ஆஞ்சனேயர், சுக்ரீவன் உள்ளிட்ட வானர சேனைகள் அமைத்தனர். மேலும் ராமனிடம், விபீஷணர் சரணாகதி அடைந்த இடம் என்ற பெருமையும் சேதுகரைக்கு உண்டு. இதுகுறித்து சேதுக்கரை வரலாற்று ஆர்வலர் மு.மங்கள ராஜு கூறுகையில், “சேதுக்கரைக்கு ரெத்தினாகரம் என்று மற்றொரு பெயரும் உண்டு. கடற்கரையில் இருந்து கடலில் ஒரு கி.மீ., தொலைவில் தென்கிழக்காக உள்ள குறிப்பிட்ட இடத்தில் 50 அடி அகலம் கொண்ட வெண் கற்களால் ஆன பாலம் உள்ளது. இந்த பாலம் இலங்கை தலைமன்னார் வரை செல்கிறது. 13 ஆண்டுகளுக்கு முன்பு வரை ராமேஸ்வரம் வரும் யாத்ரீகர்கள் நாட்டு படகுகள் (வத்தை) மூலம் வானர சேனைகள் அமைத்த பாலத்திற்கு சென்று தரிசித்துவிட்டு திரும்புவது வழக்கமாக இருந்தது. அப்போது இடுப்பளவு மட்டுமே கடல்நீர் இருந்தது. சூரிய உதயம் அதாவது காலை 6.30 மணி முதல் பிற்பகல் 1:30 மணிவரை மட்டுமே யாத்ரிகர்கள் அழைத்து செல்லப்படுவர். அதன்பின்னர் கடல்நீர் மட்டம் உயர்ந்துவிடும். தற்போது அதிக ஆழம் கொண்ட பகுதியாக மாறியுள்ளது. இதனால் 2003 முதல் பாறை பாலத்தை பார்வையிட செல்ல அரசு தடைவிதித்துள்ளது. இதனால் சேதுக்கரை வரும் யாத்ரிகர்கள் கடற்கரையில் நின்றவாறு வானர சேனைகள் அமைத்த சேதுபாலம் இருக்கும் பகுதியை நோக்கி வணங்கிவிட்டு செல்கின்றனர்,” என்றார். மீனவர் ஒருவர் கூறுகையில், “கடந்த 2003க்கு முன்புவரை சேதுபாலத்தை பார்வையிட சேதுக்கரையிலிருந்து ஏராளமான யாத்ரிகர்களை வத்தைகளில் அழைத்து செல்வோம். இதை ஒரு தொழிலாகவே இப்பகுதி மீனவர்கள் செய்துவந்தனர். அரசு தடைவிதித்தால் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். வெளியூர்களிலிருந்து வரும் விசைப்படகுகள் வழிதெரியாமல் பாறையில் மோதுகின்ற சம்பவம் இப்போதும் நடக்கிறது,” என்றார்.