பதிவு செய்த நாள்
07
அக்
2011
12:10
மற்ற இந்தியருடன் என் சேவையையுத்தத்திற்கு அளிக்க முன்வந்திருக்கிறேன் என்ற செய்தி தென்னாப்பிரிக்காவுக்கு எட்டியதும் எனக்குத் தந்திகள் வந்தன. அதில் ஒன்று ஸ்ரீபோலக்கிடமிருந்து வந்தது. எனது கொள்கையான அகிம்சைக்கும் நான் செய்யும் காரியத்திற்கும் எப்படிப் பொருத்தமாகும் என்று அவர் கேட்டிருந்தார். இந்த ஆட்சேபத்தை நான் ஓரளவுக்கு எதிர்பார்த்தே இருந்தேன். இப்பிரச்னையைக் குறித்துஹிந்த் சுயராஜ் (இந்திய சுயராஜ்யம்) என்ற நூலில் விவாதித்திருக்கிறேன். அதல்லாமம் தென் ஆப்பிரிக்காவில் நண்பர்களுடனும் இதைக் குறித்து அடிக்கடி விவாதித்து வந்திருக்கிறேன். யுத்தத்தில் இருக்கும் அதர்மத்தை எல்லோருமே ஒப்புக்கொண்டிருக் கிறோம். என்னைத் தாக்கியவரைக் கைதுசெய்து வழக்குத் தொடர நான் தயாராக இல்லாத போது, போரில் ஈடுபட்டு இருக்கிறவர்களின் லட்சியம் நியாயமானதா, இல்லையா என்பது பற்றி எனக்கு எதுவுமே தெரியாமல் இருக்கும்போது, யுத்தத்தில் ஈடுபடுவதற்கு நான் தயாராக இருப்பதற்கில்லை. என்றாலும் முன்பு போயர் யுத்தத்தில் நான் சேவை செய்திருக்கிறேன் என்பது நண்பர்களுக்குத் தெரியும். ஆயினும், அதன் பிறகு என் கருத்துக்கள் மாறுதலை அடைந்து இருக்கின்றன என்று அவர்கள் எண்ணிக் கொண்டார்கள்.
உண்மையில் போயர் யுத்தத்தில் நான் பங்கு கொள்ளும்படி எந்தவிதமான வாதங்கள் என்னைத் தூண்டினவோ அதே விதமான வாதங்களே இச்சமயமும் என்னை இம்முடிவுக்கு வரும்படி செய்தன. யுத்தத்தில் ஈடுபடுவதுஅகிம்சைக்குக் கொஞ்சமும் பொருத்தமானதல்ல என்பது எனக்குத் தெளிவாகவே தெரிந்திருந்தது. ஆனால், தன்னுடைய கடமை என்ன என்பதை யாரும் தெளிவாக அறிந்து கொண்டுவிட முடிவதில்லை. அதிலும் சத்தியத்தை நாடுகிறவர் அடிக்கடி இருட்டில் தடவிக்கொண்டிருக்க வேண்டியே வருகிறது. அகிம்சை என்பது விரிவான பொருள்களைக் கொண்டதோர் கொள்கை. நாமெல்லோரும் இம்சையாகிய தீயில் சிக்கிக் கொண்டு உதவியற்றுத் தவிக்கும்மாந்தரேயாவோம். ஓர் உயிரைத் தின்றே மற்றோர் உயிர் வாழ்கிறது என்று சொல்லப்படுவதில் ஆழ்ந்த பொருள் உண்டு. மனிதன்,வெளிப்படையாக இம்சையை அறிந்தோ, அறியாமலோ செய்யாமல் ஒரு கணமும் வாழமுடியாது. வாழ்வது என்ற ஒன்றிலேயே, உண்பது, குடிப்பது, நடமாடுவது ஆகியவைகளில், என்ன தான் மிகச் சிறியதாயிருப்பினும் ஏதாவது இம்சை அல்லது உயிரைக் கொல்லுவது அவசியமாக இருந்துதான் தீருகிறது. ஆகையால், அகிம்சை விரதம் கொண்டவர், அந்தத் தருமப்படி உண்மையோடு நடப்பதாயின், அவருடைய ஒவ்வோர் செயலும் கருணையிலிருந்தே எழுவதாக இருக்க வேண்டும். மிக மிகச் சிறிய உயிரையும் கூடக் கொல்லாமல் தம்மால்முடிந்த வரையில் அதை அவர் காப்பாற்றவேண்டும்.
இவ்விதம் இம்சையின் மரணப் பிடியிலிருந்து விடுபடவும் இடை விடாதுமுயன்று வரவேண்டும், புலனடக்கத்திலும்கருணையிலும் அவர் இடை விடாது வளர்ந்து கொண்டும் இருப்பார். ஆனாலும்,புற இம்சையிலிருந்து மாத்திரம் அவர் என்றுமே பூரணமாக விடுபட்டு விட முடியாது.மேலும், எல்லா ஜீவராசிகளின் ஒருமைப்பாடே அகிம்சையின் அடிப்படையாகையால், ஒன்றின் தவறு மற்றெல்லாவற்றையும் பாதிக்காமல் இருக்க முடியாது. ஆகவே, மனிதன் இம்சையிலிருந்து முற்றும் விடுபட்டு விட இயலாது.ஒரு சமூகத்தைச் சேர்ந்தவராக ஒருவர் இருந்து கொண்டிருக்கும் வரையில், அச் சமூகத் தொடக்கத்திலிருந்தேஏற்படுவதான இம்சையில் அவரும் கலந்து கொண்டு விடாமல் இருப்பதற்கில்லை. இரு நாட்டினர் போராடிக் கொண்டிருக்கும்போது, யுத்தத்தை நிறுத்துவதே அகிம்சைவாதியின் பொறுப்பு. அப் பொறுப்பை நிறைவேற்ற இயலாதவர், யுத்தத்தை எதிர்ப்பதற்கான சக்தி இல்லாதவர்; யுத்தத்தை எதிர்ப்பதற்கு வேண்டிய தகுதியை அடையாதவர் இவர்களும் அப்போரில் ஈடுபடக் கூடும். அப்படிப் போரில் ஈடுபட்டாலும் தம்மையும் தம் நாட்டையும் உலகத்தையும் போரிலிருந்து மீட்க முழு மனத்துடன் முயற்சி செய்யவேண்டும்.
பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மூலமே என் அந்தஸ்தையும், என் நாட்டு மக்களின் அந்தஸ்தையும் உயர்த்திக்கொள்ளலாம் என்று நான் நம்பியிருந்தேன். இங்கிலாந்தில் நான் இருந்த போது பிரிட்டிஷ் கடற்படையின் பாதுகாப்பை நான் அனுபவித்து வந்தேன். பிரிட்டனின் ஆயுத பலத்தின் கீழ் நான் பத்திரமாகவும் இருந்து வந்தேன். நான் இவ்விதம் இருந்ததன் மூலம் அதனுடைய பலாத்கார சக்தியில் நான் நேரடியாகப் பங்குகொண்டு வருகிறேன். ஆகையால், சாம்ராஜ்யத்துடன் எனக்கு இருக்கும் தொடர்பை வைத்துக்கொண்டு அதன் கொடியின் கீழ் வாழ நான் விரும்பினால், நான்கு காரியங்களில் ஏதாவது ஒன்றின்படியே நான் நடக்க வேண்டும்: யுத்தத்திற்கு என்னுடைய பகிரங்கமான எதிர்ப்பைத் தெரிவிக்கலாம். சத்தியாக்கிரக விதிகளின்படி சாம்ராஜ்யம் அதன் ராணுவக்கொள்கையை மாற்றிக் கொள்ளும் வரை அதைப் பகிஷ்கரித்து விடலாம்; அல்லது மீறுவதற்கு ஏற்றவையான அதன் சட்டங்களை மீறுவதன் மூலம் சட்ட மறுப்பைச் செய்து சிறைப் பட முற்படலாம்; இல்லாவிட்டால், சாம்ராஜ்யத்தின் சார்பில் யுத்தத்தில் ஈடுபட்டு அதன் மூலம் யுத்த பலாத்காரத்தை எதிர்ப்பதற்கு வேண்டிய பலத்தையும் தகுதியையும் பெறலாம். இத்தகைய ஆற்றலும் தகுதியும் எனக்கு இல்லை. ஆகவே, அவற்றை அடைவதற்கு யுத்தத்தில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழி இல்லை என்று எண்ணினேன்.
அகிம்சை நோக்குடன் கவனித்தால், போர்ச் சேவையில் ஈடுபட்டிருக்கிறவர்களில் போர்க்களத்தில் போராடும் சிப்பாய்களுக்கும் மற்றவர்களுக்கும் வேற்றுமையை நான் காணவில்லை. கொள்ளைக்காரர்களுக்கு மூட்டை தூக்கவோ, அவர்கள் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும்போது காவல் இருக்கவோ, அவர்கள் காயமடையும்போது அவர்களுக்குப் பணி விடை செய்யவோ ஒப்புக்கொள்ளுகிறவனும், கொள்ளைக்காரர்களைப் போல் கொள்ளைக்குற்றம் செய்தவனேயாவான். அதேபோலப் போரில் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை செய்வதோடு மாத்திரம் இருந்து விடுகிறவர்களும் போர்க் குற்றத்திலிருந்து விடுபட்டவர்கள் ஆகமுடியாது. போலக்கிடமிருந்து தந்தி வருவதற்க முன்னாலேயே இந்த வகையில் இதையெல்லாம் குறித்து என்னுள்ளேயே நான் விவாதித்துக்கொண்டேன். அத்தந்தி வந்த பிறகும் இதைக் குறித்துப் பல நண்பர்களுடன் விவாதித்தேன்.போரில் சேவை செய்ய முன் வருவது என் கடமை என்ற முடிவுக்கே வந்தேன்.
பிரிட்டிஷ் உறவுக்குச் சாதகமாக நான் அப்பொழுது கொண்டிருந்த கருத்தைக் கொண்டு கவனிக்கும்போது, அந்த விதமான விவாதப் போக்கில் எந்தத் தவறும் இருப்பதாக இன்றும் நான் கருதவில்லை. அப்பொழுது நான் செய்ததற்காக வருத்தப்படவும் இல்லை. என் நிலைமை சரியானதே என்பதை என் நண்பர்கள் எல்லோருமே ஒப்புக்கொள்ளும்படி செய்ய என்னால் அப்பொழுதும் முடியவில்லை என்பதே அறிவேன். இப்பிரச்சனை மிகவும் நுட்பமானது. இதில் கருத்து வேற்றுமை இருந்து தான் தீரும். ஆகையால், அகிம்சையில் நம்பிக்கையுள்ளவர்களுக்கும், வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் அதை அனுசரிக்கத் தீவிரமாக முயன்று வருகிறவர்களுக்கும் என்னால் இயன்ற அளவு தெளிவாக என்னுடைய வாதங்களை எடுத்துக் கூறினேன். சத்தியத்தின் பக்தர், சம்பிரதாயம் என்பதற்காக எதையும்செய்து விட முடியாது. தாம் திருத்தப்படுவதற்கு அவர் எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும். தாம் செய்தது தவறானது என்பதைக் கண்டுகொள்ளும் போது, என்னநேருவதாயினும் பொருட்படுத்தாது, அதை ஒப்புக்கொண்டு அதற்குப் பரிகாரம் தேட வேண்டும்.