ஐயன் ஐயப்பன் வலக்கரத்தால் சின்முத்திரை காட்டியபடி அருள்கிறார். நம்மில் பலரும் ஸ்வாமி சின்முத்திரையை தமது கால் மூட்டின் மீது வைத்தி ருப்பதாக நினைக்கிறார்கள். அப்படியல்ல, அவர் அந்த முத்திரையை தன் மார்புக்கு மிக அருகில் வைத்துள்ளார். இது, நம்மை இந்த அண்ட சராசரத்துடன் தொடர்புகொள்ள வழி நடத்தும். சுண்டு விரல், மோதிர விரல், நடுவிரல் என மூன்று நிமிர்ந்த விரல்களும், அகங்காரம், மாயை மற்றும் கர்மாவைக் குறிக்கும்; ஆள்காட்டி விரல் ஆத்மாவை குறிக்கிறது (நாம் -ஜீவாத்மா). கட்டைவிரல், பரமாத்மாவை குறிக்கும். இந்த இரண்டு விரல்களின் இணைப்பு... அகங்காரம், மாயை மற்றும் கர்மாவை அகற்றி ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணையவேண்டும் என்பதைக் குறிக்கும். இந்த சின்முத்திரைக்கு இன்னும் நிறைய விளக்கங்கள் உள்ளன. நான் ஒன்றை மட்டும்தான் விளக்கியிருக்கிறேன்.