பதிவு செய்த நாள்
05
டிச
2016
01:12
சபரிமலை: பந்தளம் அரண்மனையில் இருந்து சபரிமலைக்கு திரு ஆபரணம் கொண்டு வரும் பாதையை, பக்தர்கள் வரும் பாதையாக மாற்றும் முயற்சி தொடங்கியுள்ளது.
பந்தளம் அரண்மனையில் வளர்ந்து சபரிமலையில் குடிகொண்ட ஐயப்பனை காண, ஆபரணங்களுடன் மன்னர் வந்ததாக ஐதீகம். மகரவிளக்கு பூஜைக்கு ஒரு நாள் முன்னதாக பந்தளம் அரண்மைனையில் இருந்து திருஆபரணம் சன்னிதானம் வரும். குளநடை, மெழுவேலி, கிடங்ஙன்னுார், ஆரன்முளா, மல்லப் புழசேரி, கோழஞ்சேரி, செருகோல், அயிரூர், ரான்னி, வடசேரிக்கரை, பெருநாடு பகுதிகள் வழியாக திரு ஆபரண பவனி வரும். வருவாய்த் துறை ஆவணங்களில் இந்த பாதை பந்தளம் தார என குறிப்பிடப்பட்டது. நாளடைவில் திரு ஆபரண பாதை என மாற்றப்பட்டது.ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இந்த பவனி செல்வதால், ஆக்கிரமிப்பாளர்கள் இந்த பாதையை ஆக்கிரமித்துள்ளனர். தற்போது, ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட மாநில பக்தர்களும், ஆலப்புழா, பத்தணந்திட்டை, கோட்டயம் மாவட்ட பக்தர்களும் பந்தளம் வருகின்றனர். இவர்களை திரு ஆபரண பாதை வழி சபரிமலை வர செய்தால் ஆக்கிரமிப்புகள் தடுக்கப்படும் என கருத்து நிலவுகிறது. இதுகுறித்து கருத்துக்களை கேட்பதற்காக, இந்து அமைப்புகளின் கூட்டத்தை கூட்ட இருப்பதாக, தேவசம்போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.