பதிவு செய்த நாள்
10
அக்
2011
11:10
திருநெல்வேலி : நெல்லையப்பர் கோயிலில் மழைவேண்டி வருண ஜெபம் மற்றும் தேவாரப்பதிகம் பாடல்கள் மூலம் கூட்டு பிரார்த்தனை, தாமிரபரணியில் சிறப்பு பூஜைகள் நடந்தது. நாட்டில் மழை பெய்து சுபிட்சம் ஏற்படவும், பயிர்கள் செழித்து வளரவும், நெல்லை மாவட்டத்தில் போதிய மழை பெய்யவும் வேண்டி நெல்லையப்பர் கோயிலில் வருணஜெபம் நடத்த முடிவு செய்யப்பட்டது. நெல்லையப்பர் கோயில் சுவாமி சன்னதியில் வருணஜெபத்தை முன்னிட்டு நேற்று காலை ருத்ரஜெபம், ருத்ர ஏகாதசி, சுவாமி நெல்லையப்பர், பள்ளத்துலிங்கத்திற்கு தாரா அபிஷேகம், பன்னிரு திருமுறை வழிபாட்டுக்குழுவினர் மழைவேண்டி தேவாரம், திருமுறை பதிகங்களில் உள்ள பாடல்களை பாடி கூட்டு பிரார்த்தனை நடந்தது. தொடர்ந்து மழைவேண்டி சுவாமி சன்னதியில் சிறப்பு ஹோமம், வருணஜெபம், சுவாமிக்கு சகலவிதமான திரவியங்களால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. நெல்லையப்பர் கோயிலில் பூஜையை தொடர்ந்து குறுக்குத்துறை தாமிரபரணி நதியில் வேதவிற்பனர்கள் மழைவேண்டி சிறப்பு பிரார்த்தனை, சகல விதமான திரவியங்களால் தாமிரபரணி நதிக்கு அபிஷேகம் மற்றும் கூட்டு பிரார்த்தனை நடந்தது. வருண ஜெபத்தில் நெல்லையப்பர் கோயில் அர்ச்சகர்கள், ஹரிஹர குக பஜனை சபா அங்கத்தினர்கள், வைதீகர்கள், பன்னிரு திருமுறை வழிபாட்டுக்குழுவினர், நெல்லையப்பர் காந்திமதியம்பாள் பக்தர்பேரவையினர், நெல்லை கல்சுரல் அகடமியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.