சிவகங்கை: ஜல்லிக்கட்டு தடையால் தமிழகத்தில் ஏராளமான கிராம கோயில் விழாக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் கிராம கோயில், சர்ச் விழாக்களையொட்டி பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டன. அவற்றிற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனால் பல கிராமங்களில் கோயில் விழாக்கள் நடத்துவதையே நிறுத்தி விட்டனர். சிவகங்கை மாவட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட கோயில் விழாக்களில் மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டு வந்தது. தடை விதிக்கப்பட்டதால் காளைகளை அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டை அனுமதிக்க வலியுறுத்தி ஏர் ஏறு அறக்கட்டளையினர் நேற்று சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அவர்கள் கூறியதாவது: ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு தடையால் நாட்டு மாட்டினங்கள் அழிந்து வருகின்றன. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்தினால் மட்டுமே நாட்டு மாடு, விவசாயத்தை மீட்க முடியும். இதற்காக மிருகவதை தடுப்புச் சட்டம் 1960 ல் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.