விழுப்புரம்: கார்த்திகை மாத கவுசிக ஏகாதசியை முன்னிட்டு, வைகுண்டவாச பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் கருட சேவையில் அருள்பாலித்தார். விழுப்புரம் ஜனகவல்லி தாயார் சமேத வைகுண்டவாச பெருமாள் கோவிலில் கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி (கவுசிக ஏகாதசி) விழா நடந்தது. விழாவையொட்டி, மாலை ௬:௦௦ மணிக்கு மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இதில், சிறப்பு மலர் அலங்காரத்தில் உற்சவர் பெருமாள், கருட சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் உட்பிரகாரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.