திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில்‚ கைசீக ஏகாதசியை முன்னிட்டு‚ ஜீயர் பிரம்ம ரதத்தில் வீதியுலா நடந்தது. திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில்‚ ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் பிரம்மரதம் ஏறும் வைபவம் நேற்று நடந்தது. அதிகாலை 4:00 மணிக்கு பெருமாள் விஸ்வரூப தரிசனமும், 5:00 மணிக்கு கைசீகபுராணம் வாசிக்கப்பட்டது. சுவாமிக்கு 12 முறை துவாதசி ஆராதனை நடந்தது. காலை 7:00 மணிக்கு ஜீயர் சுவாமிகள் பிரம்ம ரதத்தில் புறப்பாடாகி‚ முக்கிய வீதிகள் வழியாக சென்று ஜீயர் மடத்தை அடைந்தார். பாகவத கோஷ்டிகளின் பஜனை பாடல்கள் பாடப்பட்டது. பக்தர்களுக்கு ஜீயர் சுவாமிகள் ஆசிர்வாதம் வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர்கள் செய்திருந்தனர்.