பதிவு செய்த நாள்
10
அக்
2011
01:10
பிரஜ்கி÷ஷார் பாபுவும் ராஜேந்திர பாபுவும் இணையே இல்லாத ஒரு ஜோடி. அவர்களுக்கு இருந்த அபார பக்தியின் காரணமாக, அவர்களுடைய உதவி இல்லாமல் நான் ஓர் அடியும் எடுத்து வைக்க முடியாமல் இருந்தது. அவர்களுடைய சீடர்கள் அல்லது சகாக்களான சம்பு பாபு, அனுக்கிரக பாபு, தரணி பாபு, ராம நவமி பாபு இவர்களும் மற்ற வக்கீல்களும் எப்பொழுதும் எங்களுடன் இருந்து வந்தனர். விந்தியா பாபுவும் ஜனக்தாரி பாபுவும் அப்போதைக்கப்போது வந்து எங்களுக்கு உதவி செய்வார்கள். இவர்கள் எல்லோரும் பீகாரிகள். இவர்களுக்கு இருந்த முக்கியமான வேலை விவசாயிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துகொள்ளுவது. பேராசிரியர் கிருபளானியும் எங்களோடு வந்து சேர்ந்து கொள்ளாமல் இருந்துவிட முடியாது. அவர் சிந்திக்காரர். என்றாலும், பீகாரில் பிறந்தவரைவிட உண்மையான பீகாரியாக அவர் இருந்தார். வேறு மாகாணத்தில் குடியேறி, அந்த மாகாணத்திற்குத் தங்களை அர்ப்பணம் செய்துகொண்டு விடும் ஊழியர்கள் சிலரையே நான் கண்டிருக்கிறேன். அப்படிப்பட்டவர்கள் சிலரில் ஆச்சாரிய கிருபளானியும் ஒருவர். வேறு மாகாணத்தைச் சேர்ந்தவர் என்று யாருமே உணரமுடியாதபடி அவர் செய்து வந்தார். என்னுடைய பிரதான வாசற்காப்பாளர் அவர்.
என்னைத் தரிசிப்பதற்கென்று வருபவர்களிடமிருந்து என்னைப் பாதுகாப்பதை அவர் அப்போதைக்குத் தமது வாழ்க்கையின் லட்சியமாகவும் முடிவாகவும் கொண்டிருந்தார். அவருக்கு வற்றாத நகைச்சுவை உண்டு. அந்த நகைச்சுவையின் உதவியைக் கொண்டும், சில சமயங்களில் தமது அகிம்சையோடு கூடிய மிரட்டல்களைக் கொண்டும் ஜனங்களைத் தடுத்து வந்தார். இரவானதும் அவர் தமது உபாத்திமைத் தொழிலை மேற்கொண்டு விடுவார். தமது சகாக்களுக்குத் தமது சரித்திரப் படிப்பையும் ஆராய்ச்சிகளையும் எடுத்துக்கூறி உற்சாகப்படுத்துவார். அங்கே வருகிறவர்களில் பயங்காளியாக இருக்கும் யாரையும் வீரர் ஆக்கிவிடுவார். எனக்கு அவசியமாகும்போது வந்து உதவி செய்வதாக வாக்குறுதியளித்திருந்தவர்களில் மௌலானா மஜ்ருல் ஹக்கும் ஒருவர். மாதம் இரண்டொருமுறை அவர் வந்து எங்களைப் பார்த்துவிட்டுப் போவார். அவர் அந்தக் காலத்தில் வாழ்ந்த ஆடம்பர, ஆர்ப்பாட்ட வாழ்க்கைக்கும் இன்றுள்ள அவருடைய எளிய வாழ்க்கைக்கும் அதிக வித்தியாசம் உண்டு. அவர் எங்களுடன் பழகிய விதம், அவரும் எங்களில் ஒருவரே என்று நாங்கள் எண்ணும்படி செய்தது. ஆனால், புதிதாக வருபவர்களுக்கு அவருடைய நாகரிகப் பழக்கங்களைப் பார்த்துவிட்டு வேறு விதமான எண்ணமே ஏற்படும்.
பீகாரைப் பற்றிய அனுபவம் எனக்கு அதிகமானதும், கிராமக் கல்வி இருந்தாலன்றி நிரந்தரமான வகையில் வேலை எதுவும் செய்வது சாத்தியமில்லை என்ற உறுதியான முடிவுக்கு வந்தேன். விவசாயிகளின் அறியாமையோ மிகப் பரிதாபகரமாக இருந்தது. அவர்கள் தங்கள் குழந்தைகளை ஒன்று, இஷ்டம் போல் திரியவிட்டு வந்தார்கள்; இல்லையானால், காலையிலிருந்து இரவு வரையில், தினத்திற்கு இரண்டு செப்புக் காசுக்காக, அவுரித் தோட்டங்களில் உழைக்கும்படி செய்துவந்தார்கள். அந்த நாட்களில் ஓர் ஆண் தொழிலாளிக்கு இரண்டரை அணாவுக்கு மேல் இல்லை. நான்கு அணாச் சம்பாதிப்பதில் யாராவது வெற்றி பெற்று விடுவார்களானால், அவர் மிகுந்த அதிர்ஷ்டசாலி என்றே கருதப்படுவார். என்னுடைய சகாக்களுடன் கலந்து ஆலோசித்துவிட்டு ஆறு கிராமங்களில் ஆரம்பப் பாடசாலைகளை ஆரம்பிப்பது என்று முடிவு செய்தேன். கிராமத்தினருக்கு நாங்கள் விதித்த நிபந்தனைகளில் ஒன்று, உபாத்தியாயர்களுக்கு இருக்க இடத்திற்கும் சாப்பாட்டிற்கும் அவர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும், மற்றச் செலவுகளை நாங்கள் பார்த்துக்கொள்ளுகிறோம் என்பதாகும். கிராம மக்களிடம் பணம் என்பதே கிடையாது. என்றாலும், அவர்களால் உணவுப் பொருள்களைத் தாராளமாகக் கொடுக்க முடியும்.
உண்மையில் தானியங்களும் மற்றப் பொருள்களும் கொடுக்கத் தயாராயிருப்பதாக முன் கூட்டியே அவர்கள் தங்கள் சம்மதத்தைக் கூறி விட்டனர். ஆனால், உபாத்தியாயர்களுக்கு எங்கே போவது என்பதே பெரிய பிரச்னையாக இருந்தது. சம்பளம் என்பதே இல்லாமல் சாப்பாட்டுக்கு வேண்டியதை மாத்திரமே பெற்றுக்கொண்டு வேலை செய்ய, உள்ளூரில் உபாத்தியாயர்களைக் கண்டு பிடிப்பது கஷ்டமாக இருந்தது. சாதாரணமாக உபாத்தியாயர்களிடம் குழந்தைகளை ஒப்படைக்கவே கூடாது என்பது என் கருத்து. உபாத்தியாயர்களின் ஒழுக்க உறுதி தான் முக்கியமேயன்றி அவர்களுடைய இலக்கியத் தகுதி முக்கியம் அன்று. ஆகவே, தொண்டு செய்ய முன்வரும் உபாத்தியாயர்கள் வேண்டும் என்று பொதுக்கோரிக்கை ஒன்றை வெளியிட்டேன். உடனே பலர் முன் வந்தார்கள். பாபா ஸாகிப் ஸோமன், புண்டலீகர் ஆகிய இருவரையும் ஸ்ரீகங்காதர ராவ் தேஷ்பாண்டே அனுப்பினார். பம்பாயிலிருந்து ஸ்ரீமதி அவந்திகாபாய் கோகலே வந்தார். புனாவிலிருந்து ஸ்ரீமதி ஆனந்திபாய் வைஷம்பாயண் வந்தார். சோட்டாலால், சுரேந்திரநாத், என் மகன் தேவதாஸ் ஆகியவர்களை வருமாறு ஆசிரமத்திற்கு எழுதினேன். இதற்குள் மகாதேவ தேசாயும், நரஹரி பரீக்கும் தத்தம் மனைவியர்களுடன் என்னோடு இருந்து வேலை செய்ய வந்துவிட்டார்கள். கஸ்தூரிபாயும் இவ்வேலைக்காக அழைக்கப்பட்டாள். இவ்விதம் நல்ல தொண்டர் கூட்டம் சேர்ந்துவிட்டது.
ஸ்ரீமதி அவந்திகா பாயும் ஸ்ரீமதி ஆனந்தி பாயும் போதிய அளவு படித்தவர்கள். ஆனால், ஸ்ரீமதி துர்க்கா தேசாய்க்கும் ஸ்ரீமதி மணிபென் பரீக்கும் குஜராத்தி மாத்திரமே எழுதப் படிக்கத் தெரியும். கஸ்தூரிபாய்க்கு அதுவும் தெரியாது. இப் பெண்கள் குழந்தைகளுக்கு ஹிந்தியில் எப்படிப் போதிப்பது? இலக்கணமும், எழுதப் படிக்கவும், கணக்குப் போடவும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது அவ்வளவு முக்கியமல்ல என்றும் சுத்தமாக இருக்கவேண்டியதையும், நல்ல பழக்க வழக்கங்களையும் அவர்களுக்குப் போதிப்பதே முக்கியம் என்றும் அவர்களுக்கு விளக்கிச் சொன்னேன். எழுத்துக்களைச் சொல்லிக் கொடுப்பதில் கூட, அவர்கள் நினைக்கிறபடி, குஜராத்தி, ஹிந்தி, மராத்தி மொழிகளின் எழுத்துக்களுக்கு வித்தியாசம் அதிகம் இல்லை. ஆரம்ப வகுப்புக்களைப் பொறுத்த வரையில், எழுத்துக்களையும் எண்களையும் சொல்லிக்கொடுப்பது கஷ்டமான காரியம் அல்ல என்றும் விளக்கினேன். இதன் பலன் என்னவென்றால், இந்தப் பெண்கள் சொல்லிக் கொடுத்த வகுப்புக்களே மிகவும் வெற்றிகரமானவைகளாக இருந்தன. இந்த அனுபவத்தினால் அவர்களுக்கு நம்பிக்கையும், வேலையில் சிரத்தையும் உண்டாயின. ஸ்ரீமதி அவந்திகா பாயின் பள்ளிக்கூடம், மற்றப் பள்ளிக் கூடங்களுக்கு உதாரணமாக விளங்கியது. அவர் தமது வேலையில் முழு மனத்துடன் ஈடுபட்டார். தமக்கு இருந்த அரிய ஆற்றல்களை அவர் இவ்வேலையில் உபயோகித்தார். இப் பெண்களின் மூலம் கிராமப் பெண்களை நாங்கள் ஓரளவுக்கு அணுக முடிந்தது. ஆனால், ஆரம்பக் கல்வியை அளிப்பதோடு நின்றுவிட நான் விரும்பவில்லை.
கிராமங்களில் சுகாதாரம் மிகவும் சீர்கேடான நிலையில் இருந்தது; சந்துகளிலெல்லாம் ஒரே ஆபாசம். கிணறுகளைச் சுற்றிலும் ஒரே சேறும் கும்பி நாற்றமும். முற்றங்களோ சகிக்க முடியாத அளவுக்கு ஒரே ஆபாசமாக இருந்தன. சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் முதியவர்களுக்குப் போதனை மிகவும் அவசியமாக இருந்தது. எல்லோருமே பல வகையான சரும நோய்களால் பீடிக்கப்பட்டிருந்தனர். ஆகையால், சாத்தியமான வரையில் சுகாதார சம்பந்தமான வேலையைச் செய்து, மக்கள் வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் புகுந்து வேலை செய்வது என்று முடிவு செய்தோம். இந்த வேலைக்கு டாக்டர்கள் தேவைப்பட்டனர். காலஞ்சென்ற டாக்டர் தேவின் சேவையைக் கொடுத்து உதவுமாறு இந்திய ஊழியர் சங்கத்தைக் கேட்டுக்கொண்டேன். நாங்கள் இருவரும் சிறந்த நண்பர்கள். ஆறு மாதங்கள் வந்திருந்து சேவை செய்வதாக உடனே ஒப்புக் கொண்டார். உபாத்தியாயர்களான ஆண்களும், பெண்களும் அவருக்குக் கீழிருந்து வேலை செய்ய வேண்டும். தோட்ட முதலாளிகளிடம் அம் மக்களுக்கு இருந்த குறைகள் சம்பந்தமாகவோ, ராஜீய விஷயங்களிலோ தலையிடவே வேண்டாம் என்று அவர்கள் எல்லோருக்கும் தெளிவாக அறிவித்திருந்தோம். ஜனங்களில் யாருக்காவது ஏதாவது குறை இருந்தால், அவர்களை என்னிடம் அனுப்பிவிட வேண்டும். தங்களுக்கு விதித்திருக்கும் வேலைக்கு அப்பாற்பட்டதில் தலையிடக்கூடாது என்றும் தெரிவித்திருந்தோம். இந்தக் கட்டளையெல்லாம் அற்புதமான விசுவாசத்துடன் அவர்கள் நிறைவேற்றி வைத்தார்கள். கட்டுத் திட்டங்களுக்கு மீறிய காரியம் ஒன்றாவது நடந்ததாக நினைவு இல்லை.