பதிவு செய்த நாள்
10
அக்
2011
01:10
முந்திய அத்தியாயங்களில் நான் விவரித்திருப்பதைப் போல் ஒரு பக்கத்தில் சமூக சேவை நடந்துகொண்டிருக்க, மற்றொரு பக்கத்தில் விவசாயிகளின் குறைகளைப் பற்றிய வாக்குமூலங்களைத் தயார் செய்யும் வேலையும் வேகமாக நடந்துகொண்டு வந்தது. ஆயிரக்கணக்கான வாக்குமூலங்கள் பதிவாயின. இதனால், பலன் இல்லாது போகாது. வாக்கு மூலம் கொடுக்க விவசாயிகள் அதிகமாக வரவர, தோட்ட முதலாளிகளுக்குக் கோபம் அதிகமாயிற்று. என்னுடைய விசாரணைக்கு விரோதமாகத் தங்களால் ஆனதையெல்லாம் செய்ய அவர்கள் முற்பட்டனர். ஒரு நாள் பீகார் அரசாங்கத்தினிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. உங்கள் விசாரணை நீண்ட காலத்திற்கு வளர்ந்து கொண்டு போய்விட்டது. அதை முடித்துவிட்டு, இப்பொழுது நீங்கள் பீகாரை விட்டுப் போய்விடலாமல்லவா? என்ற முறையில் அக்கடிதம் இருந்தது. கடிதம் மரியாதையாகவே எழுதப் பட்டிருந்தாலும், அதன் பொருள் என்றும் தெளிவானதே. இதற்கு நான் பதில் எழுதினேன். விசாரணை நீண்ட காலம் நடப்பதாகவே இருக்க முடியும் என்றும், மக்களுக்கு கஷ்ட நிவாரணம் அளிப்பதில் அது முடிந்தாலன்றிப் பீகாரை விட்டுப் போய்விடும் நோக்கம் எனக்கு இல்லை என்றும் அதில் கூறினேன்.
விவசாயிகளின் குறைகள் உண்மையானவை என்பதை ஒப்புக் கொண்டு, அவர்களுக்குக் கஷ்ட நிவாரணம் கிடைக்கும்படி அரசாங்கம் செய்யலாம். அல்லது சர்க்காரே உடனே இதில் விசாரணையை நடத்துவதற்கான அவசியத்தை விவசாயிகள் நிரூபித்துவிட்டார்கள் என்பதை அரசாங்கம் ஒப்புக்கொள்ளலாம்; இவ்விதம் செய்வதன் மூலம் என் விசாரணையை அரசாங்கம் முடித்து விடலாம் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டேன். லெப்டினெட் கவர்னர் ஸர் எட்வர்டு கெயிட், தம்மை வந்து பார்க்குமாறு எனக்கு எழுதினார். விசாரணைக்கு ஏற்பாடு செய்ய விரும்புவதாக அவர் கூறியதோடு விசாரணைக் கமிட்டியில் ஓர் அங்கத்தினனாக இருக்கும்படியும் என்னை அழைத்தார். கமிட்டியின் மற்ற அங்கத்தினர்கள் இன்னார் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். என் ஊழியர்களையும் கலந்து ஆலோசித்தேன். பிறகு ஒரு நிபந்தனையின் பேரில் கமிட்டியில் இருக்கச் சம்மதித்தேன். அந்த விசாரணை நடக்கும்போது என் சகாக்களைக் கலந்து ஆலோசித்துக் கொள்ள எனக்கு உரிமை இருக்க வேண்டும்;
கமிட்டியில் அங்கத்தினனாக நான் இருப்பதனால், விவசாயிகளின் கட்சியை எடுத்துக் கூறி வாதிக்கும் உரிமையை நான் இழந்தவன் ஆகமாட்டேன் என்பதை அரசாங்கம் ஒப்புக்கொள்ள வேண்டும்; இந்த விசாரணையின் பலன் எனக்குத் திருப்தியளிக்காது போகுமானால், பிறகு விவசாயிகள் என்ன நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு ஆலோசனை கூறவும், வழி காட்டவும் எனக்கு உரிமை இருக்க வேண்டும். இவைகளே நான் கேட்ட நிபந்தனைகள். ஸர் எட்வர்டு கெயிட், இந்த நிபந்தனைகள் நியாயமானவை, சரியானவை என்று கூறி அவற்றை ஏற்றுக் கொண்டார். விசாரணையைக் குறித்தும் அறிக்கை வெளியிட்டார். காலஞ்சென்ற ஸர் பிராங்க் ஸ்லையை அக்கமிட்டியின் தலைவராக நியமித்தார். விவசாயிகளின் கட்சி நியாயமானது என்று கமிட்டியினர் கண்டனர். அவர்களிடமிருந்து தோட்ட முதலாளிகள் பணம் பறித்து வந்தது, சட்ட விரோதமானது என்று கமிட்டி கண்டு, அதில் ஒரு பகுதியைத் தோட்ட முகலாளிகள் திருப்பிக் கொடுத்து விடவேண்டும் என்றும் கமிட்டி சிபாரிசு செய்தது. சட்டத்தின் மூலம் தீன் கதியா முறையை ரத்துச் செய்து விட வேண்டும் என்றும் கமிட்டி கூறியது. கமிட்டி, ஒருமனதான ஓர் அறிக்கையை வெளியிடும்படி பார்ப்பதிலும், கமிட்டியின் சிபாரிசுகளை அனுசரித்து விவசாயிகள் மசோதா நிறைவேறும்படி செய்வதிலும் ஸர் எட்வர்டு கெயிட் பெரும் பங்கு எடுத்துக்கொண்டார்.
அவர் உறுதியோடு இல்லாமல் இருந்திருந்தால், இவ்விஷயத்தில் தமது சாமர்த்தியம் முழுவதையும் உபயோகிக்காமல் இருந்திருந்தால், கமிட்டியின் அறிக்கை ஒரு மனதாக இருந்திருக்காது. விவசாயிகள் சட்டம் நிறைவேறியும் இருக்காது. தோட்ட முதலாளிகளுக்கிருந்த சக்தி அளவற்றது. கமிட்டியின் அறிக்கையையும் பொருட்படுத்தாமல், மசோதாவை விடாப்பிடியாக எதிர்த்து வந்தனர். ஆனால், ஸர் எட்வர்டு கெயிட் கடைசி வரையில் உறுதியுடன் இருந்தார். கமிட்டியின் சிபாரிசுகளை எல்லாம் நிறைவேற்றி வைத்தார். ஒரு நூற்றாண்டுக் காலம் இருந்துவந்த தீன் கதியா முறை இவ்விதம் ஒழிக்கப்பட்டுவிட்டது. அதோடு, தோட்ட முதலாளிகளின் ராஜ்யமும் ஒழிந்தது. நெடுகவும் நசுக்கப்பட்டுக் கிடந்த விவசாயிகள், இப்பொழுது சுதந்திரமடைந்தனர். அவுரிக் கறையை அழித்து விடவே முடியாது என்ற மூட நம்பிக்கையும் பொய்யாகி விட்டது. இன்னும் பல பள்ளிக்கூடங்களை வைத்து, சரியானபடி கிராமங்களில் புகுந்து வேலை செய்து, சில ஆண்டுகளுக்கு ஆக்க வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டு வரவேண்டும் என்பது என் ஆவல். இதற்கு வேண்டிய அடிப்படையும் போட்டாகிவிட்டது. ஆனால், இதற்கு முன்னால் அடிக்கடி நடந்திருப்பதைப் போல், என்னுடைய திட்டங்கள் நிறைவேறும்படி அனுமதிக்கக் கடவுளுக்கு விருப்பமில்லை. விதி வேறுவிதமாக முடிவுசெய்து, வேறிடத்தில் பணியை மேற்கொள்ள என்னை அங்கே விரட்டிவிட்டது.