Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கவர்னர் நல்லவராகும் போது ஆசிரமத்தில் கண்ணோட்டம்
முதல் பக்கம் » ஐந்தாம் பாகம்
தொழிலாளருடன் தொடர்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 அக்
2011
01:10

கமிட்டியில் என் வேலை முடிந்தும் முடியாமலும் இருக்கும்போதே ஸ்ரீமோகன்லால் பாண்டியா, ஸ்ரீசங்கர்லால் பரீக் இவர்களிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. கேடா ஜில்லாவில் விளைவு இல்லாது போய்விட்டது என்றும், நிலவரியைக் கொடுக்க முடியாமல் இருக்கும் விவசாயிகளுக்கு நான் வழி காட்டவேண்டும் என்றும் அவர்கள் எழுதியிருந்தார்கள். அந்த இடத்துக்கு நேரில் போய் விசாரிக்காமல் யோசனை கூறும் விருப்பமோ, ஆற்றலோ, தைரியமோ எனக்கு இல்லை. அதே சமயத்தில் அகமதாபாத் தொழிலாளர் நிலைமையைக் குறித்து ஸ்ரீமதி அனுசூயா பாயிடமிருந்து ஒரு கடிதமும் வந்தது. தொழிலாளர் பெற்றுவந்த கூலி மிகக் குறைவு; கூலி உயர்வு செய்யவேண்டும் என்று தொழிலாளர் நீண்ட காலமாகக் கிளர்ச்சி செய்துகொண்டு வந்தனர். முடிந்தால், அவர்களுக்கு வழிகாட்டி நடத்தவேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருந்தது. இந்தச் சிறு காரியத்தையும் அவ்வளவு தூரத்தில் இருந்துகொண்டு நடத்தும் துணிவு எனக்கு இல்லை. ஆகவே, முதல் வாய்ப்புக் கிடைத்ததுமே அகமதாபாத்துக்குப் போனேன்.

இந்த இரு விஷயங்களையும் சீக்கிரமாகவே முடித்துவிட்டு, சம்பராணில் ஆரம்பிக்கப்பட்டிருந்த ஆக்க வேலையைக் கண்காணிக்க நான் அங்கே திரும்பிவிட முடியும் என்று நம்பியிருந்தேன். ஆனால், நான் விரும்பியவாறு காரியங்கள் துரிதமாக நடை பெறவில்லை. நான் சம்பாரணுக்குத் திரும்பவும் போக முடியாது போயிற்று. இதன் பலனாகப் பள்ளிக்கூடங்கள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு விட்டன. என் சக ஊழியர்களும் நானும் எத்தனையோ ஆகாயக் கோட்டைகளைக் கட்டி வந்தோம். ஆனால் அவைகளெல்லாம் அப்போதைக்கு மறைந்து போய்விட்டன. நாங்கள் கட்டிய ஆகாயக் கோட்டைகளில் ஒன்று, கிராம சுகாதாரத்துடன் கல்வியோடும் சம்பாரணில் பசுப் பாதுகாப்பு வேலையையும் கவனிப்பது என்பது. அங்கே பசுப் பாதுகாப்பும், ஹிந்திப் பிரச்சாரமும் மார்வாரிகளுக்கே தனி உரிமையான வேலையாக இருந்து வந்ததை என் பிரயாணங்களின் போது கண்டேன். நான் பேதியாவுக்குச் சென்றபோது, ஒரு மார்வாரி நண்பர், தமது தருமசாலையில் நான் தங்குவதற்கு இடம் கொடுத்திருந்தார். அவ்வூரிலிருந்த மற்ற மார்வாரிகள், தங்களுடைய கோசாலையை (பால் பண்ணையை) எனக்குக் காட்டி, அதில் எனக்குச் சிரத்தை ஏற்படும்படி செய்தனர். பசுப் பாதுகாப்பைக் குறித்து எனக்குத் திட்டமான எண்ணங்கள் அப்பொழுதே தோன்றிவிட்டன.

இந்த வேலையைக் குறித்து அன்று ஏற்பட்ட எண்ணமே இன்றும் எனக்கு இருந்து வருகிறது. பசுப் பாதுகாப்பு என்பதில் கால்நடை வளர்ப்பு, பசுவின் இனத்தைச் சிறந்ததாக்குவது, காளை மாடுகளை ஜீவகாருண்யத்துடன் நடத்துவது, சிறந்த முறையில் பால் பண்ணைகளை அமைப்பது ஆகியவைகளையும் அடக்கியிருக்கின்றன என்பதே என் அபிப்பிராயம். இந்த வேலையில் தங்களுடைய முழு ஒத்துழைப்பையும் அளிப்பதாக மார்வாரி நண்பர்கள் வாக்களித்திருந்தார்கள். ஆனால் சம்பாரணில் நான் நிலைத்துத் தங்க முடியாது போய்விட்டதால், இத்திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. பேதியாவில் கோசாலை இன்னும் இருக்கிறது. ஆனால், அது மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கக்கூடிய பால் பண்ணையாக இல்லை. சம்பாரண் காளை மாடுகளிடம்அவைகளின் சக்திக்கு மிஞ்சி, இன்னும் வேலை வாங்கியே வருகிறார்கள். ஹிந்துக்கள் என்று சொல்லிக்கொள்ளுவோர், அப்பரிதாபகரமான பிராணிகளை இன்னும் அடித்துத் துன்புறுத்தித் தங்கள் மதத்திற்கே அவமானத்தை உண்டு பண்ணுகின்றனர். இந்த வேலை நிறைவேறாது போனது எனக்கு எப்பொழுதுமே மன வருத்தத்தை அளித்து வருகிறது. சம்பாரணுக்கு நான் போகும்போதெல்லாம் அங்குள்ள மார்வாரி, பீகாரி நண்பர்கள், கண்ணியமாக இதற்காக என்னைக் கண்டிக்கின்றனர். திடீரென்று கைவிட்டுவிட நேர்ந்த அவ்வேலைத் திட்டத்தை எண்ணி நானும் பெருமூச்சு விடுகிறேன்.

படிப்புச் சம்பந்தமான வேலை மாத்திரமே ஏதேனும் ஒரு வகையில் இன்னும் பல இடங்களில் நடந்துகொண்டுதான் வருகிறது. ஆனால், பசுப் பாதுகாப்பு வேலை நன்றாக வேர் கொள்ளவில்லையாகையால், உத்தேசித்திருந்தபடி அவ்வேலை முன்னேறவில்லை. கேடா விவசாயிகளின் பிரச்னை விவாதிக்கப்பட்டு வந்த சமயத்திலேயே அகமதாபாத் மில் தொழிலாளரின் விஷயத்தை நான் எடுத்துக்கொண்டு விட்டேன். நான் மிகவும் தரும சங்கடமான நிலையிலேயே இருந்தேன். ஆலைத் தொழிலாளரின் கட்சி மிகவும் நியாயமானது. ஸ்ரீமதி அனுசூயா பாய், தமது சொந்தச் சகோதரரும், மில் சொந்தக்காரர்களின் சார்பாக அப்போராட்டத்தை நடத்தி வந்தவருமான ஸ்ரீஅம்பாலால் சாராபாயை எதிர்த்துப் போராட வேண்டியதாயிற்று. ஆலை முதலாளிகளுடன் நான் சிநேகமாகப் பழகி வந்தேன். இதனாலேயே அவர்களுடன் போராடுவது அதிகக் கஷ்டமாக இருந்தது. அவர்களுடன் கலந்தாலோசித்தேன். இத்தகராறை மத்தியஸ்தர் முடிவுக்கு விட்டுவிடுமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டேன். ஆனால், மத்தியஸ்தர் முடிவுக்கு விடுவது என்ற கொள்கையை அங்கீகரிக்கவே அவர்கள் மறுத்துவிட்டார்கள். ஆகையால், வேலை நிறுத்தம் செய்யும்படி தொழிலாளருக்கு நான் ஆலோசனை கூற வேண்டியதாயிற்று. அப்படி அவர்கள் வேலை நிறுத்தம் செய்வதற்கு முன்னால், அவர்களுடனும் அவர்களுடைய தலைவர்களோடும் நான் மிகவும் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொண்டேன். வேலை நிறுத்தம் வெற்றிகரமாவதற்கு உள்ள கீழ்க்கண்ட நிபந்தனைகளையும் அவர்களுக்கு விளக்கிச் சொன்னேன்.

1. எந்த நிலைமையிலும் பலாத்காரத்தில் இறங்கிவிடவே கூடாது.
2. கட்டுப்பாட்டை மீறி வேலைக்குப் போகிறவர்களைத் தொந்தரவு செய்யக்கூடாது.
3. பிறர் இடும் பிச்சையை எதிர்பார்த்திருக்கக் கூடாது.
4. வேலை நிறுத்தம் எவ்வளவு காலம் நீடிப்பதாக இருந்தாலும் உறுதியுடன் இருக்க வேண்டும். யோக்கியமாக வேறு எந்த வகையிலாவது உடலை உழைத்து வேலை நிறுத்தக் காலத்தில் ஜீவனத்தை நடத்திக்கொள்ள வேண்டும்.

வேலை நிறுத்தத் தலைவர்கள், இந்த நிபந்தனைகளை நன்கு அறிந்துகொண்டு ஏற்றுக்கொண்டார்கள். தங்கள் கோரிக்கைகள் அங்கீகரிக்கப்படும் வரையில், அல்லது இத் தகராறை மத்தியஸ்தர் முடிவுக்கு விட மில்காரர்கள் சம்மதிக்கும் வரையில், தாங்கள் வேலைக்குத் திரும்புவதில்லை என்று தொழிலாளர்கள் பொதுக் கூட்டத்தில் பிரதிக்ஞை செய்துகொண்டனர். இந்த வேலை நிறுத்தத்தின் போதுதான் ஸ்ரீவல்லபாய் பட்டேலையும் ஸ்ரீசங்கரலால் பாங்கரையும் நான் நன்றாக அறியலானேன். ஸ்ரீமதி அனுசூயா பாயை இதற்கு முன்னாலேயே எனக்கு நன்றாகத் தெரியும். சபர்மதி நதிக்கரையில் ஒரு மரத்தின் நிழலில் தினமும் வேலை நிறுத்தக்காரர்களின் பொதுக்கூட்டத்தை நடத்தி வந்தோம். இக்கூட்டங்களுக்குத் தொழிலாளர் ஆயிரக்கணக்கில் வருவார்கள். என்னுடைய பேச்சில், அவர்களுடைய பிரதிக்ஞையைக் குறித்தும், அமைதியையும் சுயமதிப்பையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பைப் பற்றியும் அவர்களுக்கு ஞாபகமூட்டி வந்தேன். இத்தொழிலாளர்கள் தினமும் நகரின் தெருக்களில், பிரதிக்ஞையை அனுசரியுங்கள் என்று எழுதிய கொடியுடன் அமைதியாக ஊர்வலம் வருவார்கள். வேலை நிறுத்தம் இருபத்தொரு நாள் நடந்தது. வேலை நிறுத்தம் நடந்து கொண்டிருந்தபோது, அப்போதைக்கப்போது ஆலை முதலாளிகளைச் சந்தித்துத் தொழிலாளருக்கு நியாயத்தைச் செய்யும்படி கேட்டுக் கொண்டேன். எங்களுக்கும் ஒரு பிரதிக்ஞை உண்டு என்று அவர்கள் சொன்னார்கள். அவர்கள் மேலும் கூறியதாவது: எங்களுக்கும் தொழிலாளருக்கும் இருக்கும் உறவு, பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் உள்ள உறவைப்போன்றது. ஆகவே, மூன்றாமவர்கள் இதில் தலையிடுவதை நாங்கள் எவ்வாறு சகிக்க முடியும்? மத்தியஸ்தத்திற்குதில் எங்கே இடமிருக்கிறது?

 
மேலும் ஐந்தாம் பாகம் »
temple news

முதல் அனுபவம் அக்டோபர் 10,2011

நான் தாய்நாட்டிற்கு வந்து சேருவதற்கு முன்னாலேயே போனிக்ஸிலிருந்து புறப்பட்டவர்கள் இந்தியா சேர்ந்து ... மேலும்
 
temple news
கவர்னர் என்னைப்பார்க்க விரும்புகிறார் என்று நான் பம்பாய் வந்து சேர்ந்ததுமே கோகலே எனக்குத் தகவல் ... மேலும்
 
temple news
புனாவிலிருந்து ராஜ்கோர்ட்டுக்கும் போர்பந்தருக்கும் போனேன். காலஞ்சென்ற என் சகோதரரின் மனைவியையும் ... மேலும்
 
temple news

சாந்திநிகேதனம் அக்டோபர் 10,2011

ராஜ்கோட்டிலிருந்து சாந்திநிகேதனத்திற்குச் சென்றேன். அங்கே ஆசிரியர்களும் மாணவர்களும் என்னை அன்பில் ... மேலும்
 
temple news
மூன்றாம் வகுப்புப் பிரயாணிகள், டிக்கெட்டுகளை வாங்குவதற்கும்கூட என்ன கஷ்டங்களையெல்லாம் அனுபவிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar