பதிவு செய்த நாள்
13
டிச
2016
10:12
தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களில் நேற்று கார்திகை தீப திருவிழா கோலாகலமாக நடந்தது. மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது. தேனி மாவட்டத்தில் நேற்று கார்த்திகை தீப திருவிழா கோலாகலமாக நடந்தது. கோயில் மற்றும் வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபட்டனர். பெரியகுளம் அருகே கைலாசபட்டி பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோயிலில், கார்த்திகை தீபத்திருவிழா நடந்தது. நேற்று காலை விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கி ரிஷப கொடியேற்றுதல், தீபாராதனை, பாலதீபம் ஏற்றப்பட்டது. 108 கிலோ நெய் ஊற்றி, மகாதீபத்தை, அர்ச்சகர் ராஜாபட்டர் ஏற்றினார். சிறப்பு அலங்காரத்தில் கைலாசநாதர் காட்சியளித்தார்.
போடி: போடி பரமசிவன் மலைக்கோயிலில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் போடி பரமசிவன் கோயிலில் சிங்காரவேலன் பழனி பாதயாத்திரை குழு தலைவர் ஜெயராமன் தலைமையில் நடந்தது. செயலாளர் குமார், துணைத்தலைவர் முருகன், குருசாமி சுருளிவேல் முன்னிலை வகித்தனர். நகரில் இருந்து பார்த்தால் ஜோதி தெரியும் படி அரோகரா கோஷத்துடன் மகா தீபம் ஏற்றப்பட்டது. சிவனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபராதனை நடந்தது. முருகன், லெட்சுமி நாராயணனுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. தேனி பெத்தாட்சி விநாயகர் கோயில் 108 சங்காபிஷேகம் நடந்தது.பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில், தேவதானப்பட்டி முருகமலை பரமசிவன் கோயிலிலும் மகா தீபம் ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.