மூணாறு: மூணாறில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா வெகு சிறப்பாக நடந்தது.மூணாறில் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தீபத் திருநாளான கார்த்திகை ஆண்டு தோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று திருவிழா கடந்தாண்டை விட வெகு சிறப்பாக நடந்தது. பழைய மூணாறில் பார்வதியம்மன் கோயிலில் இருந்து காலை காவடி, பால் குடம் எடுத்து வந்து, முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பல்வேறு சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடந்தன. கார்த்திகையை முன்னிட்டு,தோட்டத் தொழிலாளர்களுக்கு நிர்வாகம் விடுமுறை அளித்து வருகின்றது. ஆகவே முருகனை தரிசிப்பதற்கு தொழிலாளர்களின் கூட்டம் கூடுதலாக காணப்பட்டது.நேர்த்திக்கடன்: ஆனால் நேற்று வழக்கத்தைக்காட்டிலும் கூட்டம் அதிகரித்ததால், காலை முதல் மாலை வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை தரிசித்தனர். பறவை காவடி எடுத்தும், அலகு குத்தியும், பல்வேறு தெய்வங்களை போன்று வேஷமிட்டும் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். கோயிலில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மாலையில் கோயிலின் அருகில் உள்ள மலையில் கார்த்திகை தீபம் ஏற்றினர். இரவில் முருகன், வள்ளி,தெய்வானையுடன் சப்பரத்தில் வீதி உலா வந்தனர். சண்முகநாதன் தலைமையிலான பழனி பாதயாத்திரை குழுவினர் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.