பதிவு செய்த நாள்
10
அக்
2011
03:10
தொழிலாளர் தகராறைப் பற்றி நான் மேலே விவரிப்பதற்கு முன்னால், ஆசிரம விஷயத்தைக் குறித்தும் ஒரு கண்ணோட்டம் செலுத்துவது முக்கியமாகும். சம்பாரணில் நான் இருந்த சமயம் முழுவதிலும், ஆசிரமம் என் மனத்தை விட்டு விலகினதே இல்லை. அவசரமாகச் சில சமயம் அங்கே போய்ப் பார்த்து விட்டும் வருவேன். அச்சமயம் ஆசிரமம் அகமதாபாத்திற்கு அருகிலுள்ள கோச்ராப் என்ற சிறு கிராமத்தில் இருந்தது. இக்கிராமத்தில் பிளேக் நோய் உண்டாயிற்று. அதனால், ஆசிரமக் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என்று கண்டேன். ஆசிரமத்திற்குள் சுத்தத்தின் விதிகளை என்னதான் ஜாக்கிரதையாக அனுசரித்தாலும், சுற்றிலும் உள்ள சுகாதாரக் கேடான நிலைமையினால், ஆசிரமத்தில் இருப்பவர்கள் பாதிக்கப்படாமல் இருந்துவிட முடியாது. கோச்ராப் மக்கள் இந்தச் சுகாதார விதிகளை அனுசரிக்கும்படி செய்யும் நிலையிலோ, வேறு வகையில் அவர்களுக்குச் சேவை செய்யும் நிலையிலோ நாங்கள் அப்பொழுது இல்லை.
ஆசிரமம், பட்டணத்திற்கும் கிராமத்திற்கும் கொஞ்சம் தூரத்திலேயே இருக்க வேண்டும். என்றாலும், இந்த இரண்டுக்கும் போக முடியாத தொலை தூரத்திலும் இருக்கக் கூடாது என்பது எங்கள் கொள்கை. என்றாவது ஒரு நாள், எங்களுக்குச் சொந்தமான நிலத்திலேயே ஆசிரமத்தை அமைப்பது என்றும் தீர்மானித்திருந்தோம். கோச்ராப்பை விட்டுப் போய்விட வேண்டும் என்பதற்கு அங்கே பரவிய பிளேக் நோயே போதுமான முன்னெச்சரிக்கை என்று எனக்குத் தோன்றிற்று. அகமதாபாத் வர்த்தகரான ஸ்ரீ பூஞ்சாபாய் ஹிராசந்துக்கு ஆசிரமத்துடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. புனிதமான, தன்னலமற்ற எண்ணத்தின் பேரில் அவர் பல விஷயங்களிலும் எங்களுக்குச் சேவை செய்து வந்தார். அகமதாபாத் காரியங்களில் அவருக்கு அதிக அனுபவம் உண்டு. எங்களுக்குத் தகுந்த இடம் தேடித் தருவதாக அவர் முன்வந்தார். இடம் தேடிக்கொண்டு நானும் அவருடன் கோச்ராப்புக்குத் தெற்கிலும் வடக்கிலுமாகப் போனேன். மூன்று நான்கு மைல் வடக்கில் ஓர் இடத்தைப் பார்க்குமாறு அவருக்கு யோசனை சொன்னேன். பிறகு அவர், இப்பொழுது ஆசிரமம் இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்தார். இந்த இடம், சபர்மதி மத்திய சிறைக்கு அருகாமையில் இருந்தது, எனக்கு முக்கியமாகக் கவர்ச்சியளித்தது.
சிறைப்படுவதே சாதாரணமாகச் சத்தியாக்கிரகிகளின் கதி என்று கருதப்பட்டதால், இந்த இடம் எனக்குப் பிடித்திருந்தது. பொதுவாகச் சுற்றுப்புறங்கள் சுத்தமாக இருக்கும் இடங்களையே சிறைச்சாலைகளை அமைப்பதற்குத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதையும் நான் அறிவேன். எட்டு நாட்களில் அந்த நிலத்திற்குக் கிரய சாசனம் பூர்த்தியாகி விட்டது. அந்த நிலத்தில் எந்தவிதக் கட்டிடமோ, மரமோ இல்லை. நதிக்கரையில் இருக்கிறது, ஏகாந்தமான இடத்தில் இருக்கிறது என்பவை முக்கியமான சௌகரியங்கள். முதலில் கூடாரங்கள் போட்டுக்கொண்டு அங்கே வசிக்க ஆரம்பித்து விடுவது என்று முடிவு செய்தோம். நிரந்தரமான கட்டிடம் கட்டும் வரையில் சமையலுக்கு ஒரு தகரக் கொட்டகை போட்டுக் கொள்ளுவது என்றும் தீர்மானித்தோம். ஆசிரமம் மெல்ல வளர்ந்துகொண்டு போயிற்று. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட அப்பொழுது நாங்கள் நாற்பது பேர். எல்லோருக்கும் பொதுவான ஒரே சமையல். ஆசிரமத்தைப் புது இடத்திற்குக் கொண்டு போய்விடுவது என்ற யோசனை என்னுடையது.
வழக்கம் போலவே அந்த யோசனையை மகன்லால் நிறைவேற்றி வைத்தார். குடியிருக்க நிரந்தரமான வீடுகளைக் கட்டி முடிப்பதற்கு முன்னால், நாங்கள் எவ்வளவோ சிரமப்பட வேண்டியதாயிற்று. மழைக் காலம் வரும் சமயம், சாப்பாட்டுக்கு வேண்டிய சாமான்களை, நான்கு மைல்களுக்கு அப்பால் இருக்கும் அகமதா பாத்திலிருந்து வாங்கி வர வேண்டும். அந்நிலம் வெகுகாலமாகத் தரிசாகக் கிடந்ததாகையால், அங்கே பாம்புகள் அதிகம். இத்தகைய நிலைமையில் அங்கே சிறு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு வசிப்பதென்பது பெரிய ஆபத்தாகும். எங்களில் யாரும் இத்தகைய விஷ ஜந்துக்களைப் பற்றிய பயத்தை விட்டொழித்து விட்டவர்கள் அல்ல; இப்பொழுதும் நாங்கள் அவற்றிற்குப் பயப்படாதவர்கள் அல்ல என்பதை ஒப்புக் கொள்ளுகிறேன். ஆயினும், பாம்புகளைக் கொல்வதில்லை என்பது எங்கள் பொதுவான விதி.
விஷ ஜந்துக்களைக் கொல்வதில்லை என்ற விதி, போனிக்ஸ், டால்ஸ்டாய் பண்ணை, சபர்மதி ஆசிரமம் ஆகியவற்றில் பெரும்பாலும், அனுசரிக்கப்பட்டு வந்தது. இந்த இடங்கள் ஒவ்வொன்றிலும் தரிசாகக் கிடந்த நிலத்திலேயே நாங்கள் குடியேறினோம். என்றாலும், பாம்பு கடித்ததனால் எங்களில் யாரும் இறந்ததில்லை. கருணைக் கடலான கடவுளின் கிருபையையே இதில் நான் நம்பிக்கைக் கண்ணோடு காண்கிறேன். இதைக் கொண்டு, கடவுள் பார பட்சமுடையவராக இருக்கவே முடியாது என்றும், மனிதரின் சாமான்ய விஷயங்களிலெல்லாம் தலையிட்டுக் கொண்டிருக்க கடவுளுக்கு அவகாசம் இருக்குமா என்றும் யாரும் குதர்க்கம் பேசக் கிளம்பிவிட வேண்டாம். இவ்விஷயத்தில் இருக்கும் உண்மையை, எனக்கு ஏற்பட்ட ஒரே மாதிரியான இந்த அனுபவத்தை, வேறுவிதமாக நான் சொல்லுவதற்கு இல்லை. கடவுளின் வழிகளை விவரிக்க மனிதனின் மொழிகள் தகுந்தவை அல்ல.
அவர் வழிகள் விவரிக்க முடியாதவை, பகுத்தறிய முடியாதவை - இயலாதவை - என்ற உண்மையை நான் உணருகிறேன். ஆனால், அவற்றை விவரித்துக் கூறிவிட மனிதன் துணிவானாயின், அதற்கு அவனுடைய தெளிவில்லாத பேச்சைத் தவிர வேறு எந்தவித சாதனமுமே கிடையாது. கொல்வதில்லை என்ற வழக்கத்தை அநேகமாக, ஒழுங்காக நாங்கள் அனுசரித்து வந்திருந்தும் இருபத்தைந்து ஆண்டுகளாகப் பாம்புகளால் எங்களுக்குத் தீமை ஏற்பட்டதே இல்லை என்பது, கடவுள் அருளேயன்றி அதிர்ஷ்டவசமானதொரு சம்பவம் அல்ல என்று கருதுவது ஒரு மூட நம்பிக்கையாக இருந்தாலும், அந்த மூட நம்பிக்கையை இனியும் நான் விடாமல்தான் இருப்பேன். அகமதாபாத் ஆலைத் தொழிலாளர் வேலை நிறுத்த சமயத்தில் ஆசிரமத்தின் நெசவுக் கொட்டகைக்குக் கடைகால் போட்டோம். ஏனெனில், அச்சமயம் அசிரமத்தில் முக்கியமாக நடந்துவந்த வேலை, கைநெசவு. கையினால் நூற்பதை ஆரம்பிப்பது அதுவரையில் எங்களுக்குச் சாத்தியமாக வில்லை.