பதிவு செய்த நாள்
10
அக்
2011
03:10
ஐரோப்பாவில் நாசகரமான யுத்தம் நடந்துகொண்டு வந்த போதுதான் கேடாப் போராட்டம் ஆரம்பமாயிற்று. அப்போராட்டம் முடிந்த பிறகு, யுத்தத்தில் ஒரு நெருக்கடியான நிலைமை உண்டாயிற்று. வைசிராய் டில்லியில் ஒரு யுத்த மகாநாட்டைக் கூட்டி, அதற்குப் பல தலைவர்களையும் அழைத்திருந்தார். வைசிராய் லார்டு செம்ஸ்போர்டுக்கும் எனக்கும் நெருங்கிய நட்பு இருந்ததைக் குறித்து முன்பே கூறியிருக்கிறேன். அந்த அழைப்பிற்கு இணங்கி நான் டில்லிக்குச் சென்றேன். ஆனால், அம்மகாநாட்டில் நான் கலந்து கொள்ளுவது சம்பந்தமாக எனக்குச் சில ஆட்சேபங்கள் இருந்தன. அவற்றில் முக்கியமானது, அலி சகோதரர்கள் போன்ற தலைவர்களை அம்மகாநாட்டிற்கு அழைக்கவில்லை என்பது. அப்பொழுது அவர்கள் சிறையில் இருந்தார்கள். அவர்களைக் குறித்து நான் நிறையக் கேள்விப்பட்டிருந்தேனாயினும் இரண்டொரு முறையே அவர்களைச் சந்தித்திருந்தேன். அவர்களுடைய சேவையைக் குறித்தும், தீரத்தைப் பற்றியும் என்னிடம் எல்லோரும் மிகவும் பாராட்டிக் கூறியிருந்தார்கள். ஹக்கீம் சாகிபுடன் அப்பொழுது எனக்கு நெருங்கிய பழக்கம் இல்லை. ஆனால், பிரதமப் பேராசிரியர் ருத்திராவும் தீனபந்து ஆண்டுரூஸு ம், அவருடைய பெருமையைக் குறித்து என்னிடம் அதிகம் கூறியிருந்தனர்.
ஸ்ரீ ஷு வாயிப் குரேஷியையும் ஸ்ரீ குவாஜாவையும் கல்கத்தாவில் முஸ்லீம் லீகில் சந்தித்திருந்தேன். டாக்டர் அன்ஸாரியுடனும் டாக்டர் அப்துர் ரஹ்மானுடனும் எனக்குப் பழக்கம் இருந்தது. உத்தமமான முஸ்லிம்களின் நட்பை நான் நாடினேன். முஸ்லிம்களின் புனிதமான, அதிக தேசாபிமானமுள்ள பிரதிநிதிகளுடன் தொடர்புகொண்டு அதன் மூலம் முஸ்லிம்களின் மனத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆவலுடன் இருந்தேன். ஆகையால், அப்படிப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொள்ளுவதற்காக, அவர்கள் என்னை எங்கே அழைத்துச் சென்றாலும் போவேன். அதற்கு எந்தவிதமான வற்புறுத்தலும் தேவையே இல்லை. ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே உண்மையான நட்பு இல்லை என்பதைத் தென்னாப்பிரிக்காவில் வெகு காலத்திற்கு முன்பே நான் தெரிந்துகொண்டேன். ஒற்றுமைக்குத் தடையாக இருப்பவைகளைப் போக்குவதற்குக் கிடைக்கும் எந்த வாய்ப்பையும் நான் தவற விட்டுவிடுவது இல்லை.
முகஸ்துதியாகப் பேசியோ, சுயமதிப்புக்குப் பாதகமான வகையில் நடந்தோ ஒருவரைச் சமாதானப்படுத்திக்கொண்டு விடுவது என்பது என் சுபாவத்திற்கே விரோதமானது. ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமை விஷயத்தில்தான் என்னுடைய அகிம்சை கடுமையான சோதனைக்கு உள்ளாக நேரும் என்பதை எனது தென்னாப்பிரிக்க அனுபவம் எனக்குத் தெளிவாகக் காட்டியிருந்தது. அதோடு இவ்விஷயமே என்னுடைய அகிம்சையின் சோதனைகளுக்கு மிக விஸ்தாரமான இலக்கை அளிக்கிறது என்றும் அறிந்திருந்தேன். அந்த உறுதியே இன்னும் இருந்துவருகிறது. என் வாழ்நாளின் ஒவ்வொரு கணத்திலும் கடவுள் என்னைச் சோதித்து வருகிறார் என்பதையும் உணருகிறேன். தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய போது இவ்விஷயத்தில் இவ்விதமான உறுதியான கொள்கையுடன் நான் இருந்ததனால், அலி சகோதரர்களுடன் தொடர்பு பெறுவது மிகவும் முக்கியம் என்று மதித்தேன். ஆனால், நெருக்கமான பழக்கம் ஏற்படுவதற்கு முன்னால் அவர்களைத் தனிமையில் வைத்து விட்டனர்.
கடிதம் எழுத ஜெயிலர்கள் அனுமதிக்கும் போதெல்லாம் மௌலானா முகமது அலி, பேதூலிலிருந்தும் சிந்து வாடியிலிருந்தும் எனக்கு நீண்ட கடிதங்களை எழுதிக் கொண்டிருந்தார். அவர்களைப் போய்ப் பார்க்க அனுமதி கோரி விண்ணப்பித்துக் கொண்டேன். ஆனால், அனுமதி கிடைக்கவில்லை. அலி சகோதரர்கள் சிறைப்பட்ட பின்னரே, கல்கத்தாவில் நடந்த முஸ்லிம் லீக் மகாநாட்டிற்கு முஸ்லிம் நண்பர்கள் என்னை அழைத்திருந்தார்கள். அங்கே பேசும்படி என்னைக் கேட்டுக் கொண்டபோது, அலி சகோதரர்கள் விடுதலையாகும்படி செய்ய வேண்டியது முஸ்லிம்களின் கடமை என்று பேசினேன். இதற்குச் சில நாட்களுக்குப் பிறகு இந்த நண்பர்கள், அலிகாரிலுள்ள முஸ்லிம் கல்லூரிக்கு என்னை அழைத்துச் சென்றனர். அங்கே பேசுகையில் தாய்நாட்டிற்குச் சேவை செய்வதற்காக இளைஞர்கள் பக்கிரிகள் ஆகவேண்டும் என்று அழைத்தேன். பிறகு அலி சகோதரர்கள் விடுதலைக்காக அரசாங்கத்துடன் கடிதப் போக்குவரத்து வைத்துக்கொண்டேன். இது சம்பந்தமாக, கிலாபத் பற்றி அலி சகோதரர்கள் கொண்டிருந்த கருத்துக்களையும், அவர்களுடைய நடவடிக்கைகளையும் ஆராய்ந்தேன்.
முஸ்லிம் நண்பர்களுடனும் விவாதித்தேன். இதனால் ஒன்றை உணர்ந்தேன். நான் முஸ்லிம்களின் உண்மையான நண்பனாக வேண்டுமானால், அலி சகோதரர்களின் விடுதலையைப் பெறுவதற்காகவும், கிலாபத் பிரச்னையில் நியாயமான முடிவு ஏற்படுவதாகவும், சாத்தியமான எல்லா உதவிகளையும் நான் செய்யவேண்டும் என்பதே அது. அவர்களுடைய கோரிக்கையில் தரும விரோதமானது எதுவும் இல்லையென்றால், அதன் முழு நியாயங்களையும் குறித்து நான் ஆராய்ந்துகொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. மத சம்பந்தமான விஷயங்களில் நம்பிக்கைகள் மாறுபடுகின்றன. அவரவரின் நம்பிக்கைதான் அவரவர்களுக்கு மேலானதாகும். மத சம்பந்தமான விசயங்களிலெல்லாம் எல்லோருக்கும் ஒரேவிதமான நம்பிக்கை இருக்குமானால், உலகில் ஒரே ஒரு மதம் தான் இருக்கும். கிலாபத் சம்பந்தமான முஸ்லிம்களின் கோரிக்கையில் தருமத்திற்கு விரோதமானது எதுவும் இல்லை என்பதோடு மாத்திரம் அல்ல, முஸ்லிம்களுடைய கோரிக்கையின் நியாயத்தைப் பிரிட்டிஷ் பிரதம மந்திரியே ஒப்புக்கொண்டிருக்கிறார் என்பதைப் பின்னால் அறிந்து கொண்டேன். ஆகையால், பிரதம மந்திரியின் வாக்குறுதி நிறைவேற்றப்படும்படி செய்வதற்கு என்னால் முடிந்த உதவியைச் செய்ய நான் கடமைப்பட்டிருக்கிறேன் என்று கருதினேன்.
மிகவும் தெளிவான முறையில் அந்த வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்ததால், என்னுடைய மனச் சாட்சியைத் திருப்தி செய்துகொள்ளுவதற்கு மாத்திரமே முஸ்லிம்களுடைய கோரிக்கையின் தகுதியைக் குறித்து நான் பரிசீலனை செய்துகொள்ளவேண்டியிருந்தது. கிலாபத் பிரச்னையில் நான் கொண்ட போக்கைக் குறித்து நண்பர்களும் மற்றவர்களும் குற்றஞ் சொல்லியிருக்கின்றனர். அவர்கள் கண்டித்திருந்தபோதிலும், என் கருத்தை மாற்றிக் கொள்ளுவதற்கு எந்தக் காரணமும் இருப்பதாக நான் எண்ணவில்லை. முஸ்லிம்களுடன் ஒத்துழைத்ததற்காக நான வருந்தவும் இல்லை. இதேபோன்ற சமயம் இனி ஏற்படுமானால், அதே போக்கைத்தான் நான் அனுசரிக்க வேண்டும். ஆகையால், நான் டில்லிக்குச் சென்றபோது, முஸ்லிம்களின் கட்சியை வைசிராய்க்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற முழு எண்ணத்துடனேயே சென்றேன். கிலாபத் பிரச்னை, பின்னால் அது கொண்ட உருவை அப்பொழுது அடைந்து விடவில்லை. ஆனால், நான் டில்லியை அடைந்ததும், மகாநாட்டிற்கு நான் செல்வதிற்கு எதிராக மற்றொரு கஷ்டமும் ஏற்பட்டது.
யுத்த மகாநாட்டில் நான் கலந்துகொள்ளுவது தருமமாகுமா என்ற கேள்வியைத் தீனபந்து ஆண்டுரூஸ் எழுதினார். இங்கிலாந்துக்கும் இத்தாலிக்கும் ஏற்பட்ட ரகசிய ஒப்பந்தங்களைப்பற்றிப் பிரிட்டிஷ் பத்திரிகைகளில் நடந்து வந்த விவாதங்களைக் குறித்து அவர் எனக்குக் கூறினார். இன்னுமொரு ஐரோப்பிய வல்லரசுடன் பிரிட்டன் ரகசியமாக ஒப்பந்தங்கள் செய்துகொண்டிருக்குமானால், இம்மகா நாட்டில் எப்படி நான் கலந்துகொள்ள முடியும் என்று ஸ்ரீ ஆண்டுரூஸ் கேட்டார். ஒப்பந்தங்களைப்பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. தீனபந்து ஆண்டுரூஸ் சொன்னதே எனக்குப் போதுமானது. ஆகவே, மகாநாட்டில் கலந்து கொள்ள நான் தயங்குவதன் காரணத்தை விளக்கி லார்டு செம்ஸ்போர்டுக்குக் கடிதம் எழுதினேன். இதைக் குறித்து என்னுடன் விவாதிப்பதற்காக அவர் என்னை அழைத்தார். அவருடனும் அவருடைய அந்தரங்கக் காரியதரிசி ஸ்ரீ மாபியுடனும் நீண்ட நேரம் விவாதித்தேன். அதன் பேரில் மகாநாட்டில் கலந்து கொள்ளச் சம்மதித்தேன். வைசிராய் வாதத்தின் சாராம்சம் இதுதான்: பிரிட்டிஷ் மந்திரி சபை செய்யும் ஒவ்வொன்றும் வைசிராய்க்குத் தெரியும் என்று நிச்சயம் நீங்கள் நம்பிவிட மாட்டீர்கள்.
பிரிட்டிஷ் அரசாங்கம் தவறே செய்யாது என்று நான் சொல்லவில்லை; யாரும் சொல்லவுமில்லை. ஆனால், மொத்தத்தில் சாம்ராஜ்யம் நல்லதற்கான ஒரு சக்தி என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் என்றால், இந்தியா, பிரிட்டிஷ் சம்பந்தத்தினால் மொத்தத்தில் நன்மையடைந்திருக்குமாயின், சாம்ராஜ்யத்திற்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் இச்சமயத்தில் அதற்கு உதவி செய்ய வேண்டியது ஒவ்வொரு இந்தியரின் கடமை என்பதை ஒப்புக் கொள்ளுவீர்களல்லவா? ரகசிய ஒப்பந்தங்களைக் குறித்துப் பிரிட்டிஷ் பத்திரிகைகள் என்ன கூறுகின்றன என்பதை நானும் படித்தேன். இந்தப் பத்திரிகைகள் கூறுவதற்குமேல் எனக்கு எதுவும் தெரியாது என்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன். அதோடு, அடிக்கடி பத்திரிகைகள் கதை கட்டிவிடுகின்றன என்பதையும் நீங்கள் அறிவீர்கள். பத்திரிகைச் செய்திகளை மாத்திரம் ஆதாரமாக வைத்துக் கொண்டு இது போன்ற ஒரு நெருக்கடியான சமயத்தில் சாம்ராஜ்யத்திற்கு உதவி செய்ய நீங்கள் மறுக்கலாமா? இன்று அல்ல. இந்த யுத்தம் முடிந்த பிறகு, எந்தத் தார்மிகப் பிரச்னையில் வேண்டுமானாலும் உங்கள் இஷ்டப்படி நீங்கள் ஆட்சேபங்களைக் கிளப்பி எங்களுக்குச் சவால் விடலாம். வாதம் புதியது அன்று. ஆனால், கூறப்பட்ட முறையினாலும், கூறப்பட்ட நேரத்தின் காரணமாகவும் அது புதிதாக எனக்குத் தோன்றியது. மகாநாட்டில் கலந்து கொள்ளுவதற்கும் சம்மதித்தேன். முஸ்லிம்களின் கோரிக்கையைப் பொறுத்த வரையில் வைசிராய்க்கு நான் கடிதம் எழுதுவது என்பதும் முடிவாயிற்று.