Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஒற்றுமையில் ஆர்வம் மரணத்தின் வாயிலருகில்
முதல் பக்கம் » ஐந்தாம் பாகம்
படைக்கு ஆள் திரட்டல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 அக்
2011
03:10

ஆகவே நான் மகாநாட்டிற்குச் சென்றேன். படைக்கு ஆள் திரட்டுவது சம்பந்தமான தீர்மானத்தை நான் ஆதரிக்க வேண்டும் என்பதில் வைசிராய் அதிகச் சிரத்தையுடன் இருந்தார். ஹிந்துஸ்தானியில் நான் பேச அனுமதிக்க வேண்டும் என்று கேட்டேன். என் கோரிக்கைக்கு வைசிராய் அனுமதியளித்தார். ஆனால், நான் ஆங்கிலத்திலும் பேச வேண்டும் என்று யோசனை கூறினார். நான் நீளமான பிரசங்கம் செய்ய எண்ணவில்லை. பேசினேன். என் பொறுப்பைப் பூரணமாக உணர்ந்தே நான் இத்தீர்மானத்தை ஆதரிக்கிறேன் என்ற ஒரே வாக்கியமே நான் பேசியது. ஹிந்துஸ்தானியில் நான் பேசியதற்காகப் பலர் என்னைப்பாராட்டினார்கள். இத்தகைய கூட்டத்தில் ஹிந்துஸ்தானியில் பேசியது அதுவே முதல் தடவை என்றும் அவர்கள் கூறினார்கள். இப்பாராட்டுக்களும், வைசிராய் கூட்டமொன்றில் ஹிந்துஸ்தானியில் முதல் முதல் பேசியது நானே என்பது கண்டு பிடிக்கப்பட்டதும், என்னுடைய தேசிய கௌரவத்தைப் பாதித்தன.

எனக்கு நானே குன்றிப் போய்விட்டதாக உணர்ந்தேன். நாட்டில், நாடு சம்பந்தமான வேலையைப் பற்றிய கூட்டங்களில், நாட்டின் மொழி தடுக்கப்பட்டிருப்பதும், என்னைப் போன்ற யாரோ ஒருவர் அங்கே ஹிந்துஸ்தானியில் பேசிவிட்டது பாராட்டுதற்குரிய விஷயமாக இருப்பதும், எவ்வளவு பெரிய துக்ககரமான விஷயம்! நாம் எவ்வளவு இழிவான நிலைமையை அடைந்திருக்கிறோம் என்பதை இதுபோன்ற சம்பவங்கள் நினைவூட்டுகின்றன. மகாநாட்டில் நான் பேசியது ஒரே ஒரு வாக்கியமேயாயினும் எனக்கு அது அதிக முக்கியமான பொருளைக் கொண்டதாகும். அம்மகாநாட்டையோ, அதில் நான் ஆதரித்த தீர்மானத்தையோ மறந்துவிடுவது எனக்குச் சாத்தியமல்ல. செய்வதாக நான் ஏற்றுக் கொண்டிருந்த ஒரு காரியத்தை டில்லியிலிருந்தபோதே நான் நிறைவேற்றியாக வேண்டியிருந்தது. வைசிராய்க்கு நான் கடிதம் எழுத வேண்டியிருந்தது. எனக்கு இது எளிதான காரியமன்று. அரசாங்கம், மக்கள் ஆகிய இருதரப்பினரின் நன்மையையும் முன்னிட்டு, எப்படி, ஏன் அம்மகாநாட்டுக்கு வந்தேன் என்பதை அக்கடிதத்தில் விளக்கிச் சொல்லி, அரசாங்கத்தினிடமிருந்து மக்கள் எதிர் பார்ப்பது என்ன என்பதையும் தெளிவாக எடுத்துக் காட்ட வேண்டியது என் கடமை என்பதை உணர்ந்தேன்.

லோகமான்ய திலகர், அலி சகோதரர்கள் போன்ற தலைவர்கள் மகாநாட்டிற்கு அழைக்கப்படாமல் விலக்கப்பட்டிருந்தது குறித்து என் வருத்தத்தை அக்கடிதத்தில் தெரிவித்தேன். மக்களின் குறைந்த பட்ச ராஜீயக் கோரிக்கையைக் குறித்தும், யுத்தத்தினால் ஏற்பட்ட நிலைமையின் காரணமாக உண்டாகியிருக்கும் முஸ்லிம்களின் கோரிக்கையைப் பற்றியும் அதில் கூறினேன். அக்கடிதத்தைப்பிரசுரிக்கவும் அனுமதி கேட்டேன். வைசிராயும் மகிழ்ச்சியுடன் அனுமதியளித்தார். மகாநாடு முடிந்தவுடனேயே வைசிராய் சிம்லாவுக்குப் போய் விட்டதால், அக்கடிதத்தை அங்கே அனுப்ப வேண்டியிருந்தது. எனக்கோ, அக்கடிதம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. தபால் மூலம் அனுப்புவதாயிருந்தால் தாமதம் ஆகிவிடவும் கூடும். சீக்கிரத்தில் கடிதம் போய்ச்சேர வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், அதைக் கண்டவர்களிடம் கொடுத்தனுப்பி விடவும் எனக்கு மனமில்லை. புனிதமான ஒருவர் அதை எடுத்துச் சென்று வைசிராய் மாளிகையில் அவரிடம் நேரில் சேர்ப்பிக்க வேண்டும் என்று விரும்பினேன்.

கேம்பிரிட்ஜ் மிஷனைச் சேர்ந்த புனித பாதிரியாரான பூஜ்ய அயர்லாந்திடம் கொடுத்தனுப்பலாம் என்று தீனபந்து ஆண்டுரூஸு ம், பிரதமப் பேராசிரியர் ருத்திராவும் யோசனை கூறினர். கடிதத்தைப் படித்துப் பார்த்து, அது நல்லது என்று தமக்குத் தோன்றினால் அதைக் கொண்டு போவதாக அவர் ஒப்புக்கொண்டார். அக்கடிதம் ரகசியமானதல்லவாகையால் அதை அவர் படித்துப் பார்ப்பதில் எனக்கு ஆட்சேபமில்லை. கடிதத்தை அவர் படித்தார்; அது அவருக்குப் பிடித்திருந்தது. அதைக் கொண்டுபோய்ச் சேர்க்க ஒப்புக்கொண்டார். அவருக்கு இரண்டாம் வகுப்பு ரெயில் கட்டணம் கொடுப்பதாகக் கூறினேன். ஆனால், இன்டர் வகுப்பில் பிரயாணம் செய்வதுதான் தமக்குப் பழக்கம் என்று கூறி அதை வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார். இரவுப் பிரயாணமாக இருந்தும் இன்டர் வகுப்பிலேயே சென்றார். அவருடைய எளிமையும், நேரிய, ஒளிவு மறைவு இல்லாத போக்கும் என்னைக் கவர்ந்துவிட்டன. இவ்விதம் தூய்மையான உள்ளம் படைத்த ஒருவர் மூலம் அனுப்பப் பெற்ற கடிதம், நான் எண்ணியவாறே விரும்பிய பலனைத் தந்தது. அது என் மனத்திற்கு ஆறுதல் அளித்ததோடு நான் செல்ல வேண்டிய வழியையும் தெளிவுபடுத்தியது.

செய்வதாக நான் ஏற்றுக்கொண்ட கடமையின் மற்றொரு பகுதி, படைக்கு ஆள் திரட்டுவது. இந்த வேலையைக் கேடாவைத் தவிர நான் வேறு எங்கே ஆரம்பிப்பது? முதலில் சைனியத்தில் சேருபவராக இருக்கும்படி என் சொந்த சக ஊழியர்களைத் தவிர வேறு யாரை நான் அழைக்க முடியும்? ஆகவே, நதியாத்துக்கு நான் போனதுமே வல்லபாயையும் மற்ற நண்பர்களையும் அழைத்துப் பேசினேன். அவர்களில் சிலர், என் யோசனையை எளிதில் ஏற்றுக்கொண்டு விடவில்லை. என் யோசனை பிடித்திருந்தவர்களுக்கோ, அது வெற்றி பெறுமா என்பதில் சந்தேகம் இருந்தது. எந்த வகுப்பினருக்கு நான் கோரிக்கை வெளியிட விரும்பினேனோ அந்த வகுப்பாருக்கு அரசாங்கத்தினிடம் அன்பு இல்லை. அரசாங்க அதிகாரிகளிடம் அவர்கள் அடைந்த கசப்பான அனுபவம் அவர்கள் மனத்தில் இன்றும் அப்படியே இருந்து வந்தது. என்றாலும், வேலையைத் தொடங்குவதற்கு அவர்கள் ஆதரவாக இருந்தார்கள். என் வேலையை நான் ஆரம்பித்ததுமே என் கண்கள் திறந்துவிட்டன. நான் கொண்டிருந்த நம்பிக்கை, பயங்கரமான அதிர்ச்சியை அடைந்தது. நிலவரிப் போராட்டத்தின் போது மக்கள் தங்கள் வண்டிகளை வாடகை வாங்கிக் கொள்ளாமலேயே தாராளமாகக் கொடுக்க முன்வந்தார்கள். ஒரு தொண்டர் வேண்டுமென்றபோது, இரண்டு பேர் தொண்டர்களாக வந்தார்கள்.

அப்படியிருக்க இப்பொழுதோ வாடகைக்கும் ஒரு வண்டி கிடைக்கவில்லையென்றால் தொண்டர்கள் விஷயத்தைச் சொல்லத் தேவையில்லை. ஆயினும், நாங்கள் அதைரியம் அடைந்து விடவில்லை. வண்டிகளில் போவது என்பதையே விட்டு விட்டு நடந்தே பிரயாணம் செய்வது என்று தீர்மானித்தோம். இவ்விதம் நாங்கள் தினம் இருபது மைல் நடக்க வேண்டியவர்களானோம். வண்டியே கிடைப்பதில்லையென்றால், அம் மக்கள் எங்களுக்குச் சாப்பாடு போடுவார்கள் என்று எதிர்பார்ப்பது வீண் வேலை. சாப்பாடு போடுமாறு கேட்பதும் சரியல்ல. ஆகவே, ஒவ்வொரு தொண்டரும் தமக்கு வேண்டிய சாப்பாட்டைக் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தோம். அது கோடைக்காலம். ஆகையால் படுக்கையோ, போர்வையோ தேவைப்படவில்லை. சென்ற இடங்களிலெல்லாம் கூட்டங்களை நடத்தினோம். அவற்றிற்கு மக்கள் வந்தார்கள். ஆனால், ஒருவர் இருவர்கூட ராணுவத்தில் சேர முன்வரவில்லை. நீங்கள் அகிம்சையை அனுசரிக்கிறவர்கள். அப்படியிருக்க ஆயுதங்களை ஏந்துமாறு எங்களை நீங்கள் எப்படிக் கேட்கலாம்? எங்கள் ஒத்துழைப்பைப் பெறுவதற்கு அரசாங்கம் இந்தியாவுக்கு என்ன நன்மையைச் செய்துவிட்டது? இவைபோன்ற கேள்விகளையெல்லாம் எங்களைக் கேட்டார்கள் என்றாலும், நிதானமாக நாங்கள் வேலை செய்துகொண்டு போனது பயன் தர ஆரம்பித்தது. பலர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொண்டனர். முதல் கோஷ்டி அனுப்பப்பட்டதுமே தொடர்ந்து ஆட்களை அனுப்பிக் கொண்டிருப்பது சாத்தியமாகும் என்று நம்பினோம். படைக்குச் சேரும் ஆட்களை எங்கே தங்கச் செய்வது என்பதைப் பற்றிக் கமிஷனருடன் ஆலோசிக்கவும் தொடங்கினேன்.

டில்லியில் நடந்த மகாநாட்டை அனுசரித்து, ஒவ்வொரு டிவிஷனிலும் கமிஷனர்கள் மகாநாடுகளை நடத்தினார்கள். அத்தகைய மகாநாடு ஒன்று குஜராத்தில் நடந்தது. என் சக ஊழியர்களையும் என்னையும் அதற்கு அழைத்திருந்தார்கள். நாங்கள் போயிருந்தோம். ஆனால், டில்லி மகாநாட்டில் எனக்கு இருந்த இடம்கூட இதில் எனக்கு இல்லை என்பதை உணர்ந்தேன். அடிமை உணர்ச்சியே நிலவியிருந்த அச்சூழ்நிலை எனக்குச் சங்கடமாக இருந்தது. அங்கே கொஞ்சம் விரிவாகவே பேசினேன். நான் சொன்னதில் அதிகாரிகளுக்குக் கஷ்டமாக இருக்கக்கூடிய இரண்டொரு விஷயங்கள் நிச்சயமாக இருந்தனவேயன்றி அவர்களுக்குத் திருப்தியளிக்கும்படி நான் எதுவும் சொல்ல முடியவில்லை. படையில் சேரும்படி மக்களைக் கேட்டுக்கொண்டு நான் துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டு வந்தேன். அவற்றில் நான் உபயோகித்த வாதங்களில் ஒன்று கமிஷனருக்குப் பிடிக்கவில்லை. அந்த வாதம் இதுதான்: இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி செய்திருக்கும் தவறான பல செய்கைகளில், தேச மக்கள் எல்லோருக்குமே ஆயுதப் பயிற்சி இல்லாது போகும்படி செய்திருக்கும் சட்டமே மிகவும் மோசமானது என்று சரித்திரம் கூறும். ஆயுதச் சட்டம் ரத்தாக வேண்டும் என்று நாம் விரும்பினால், ஆயுதங்களை உபயோகிப்பதை நாம் கற்றுக்கொள்ள விரும்பினால், அதற்குப் பொன்னான வாய்ப்பு இதோ இருக்கிறது. அரசாங்கத்திற்குக் கஷ்டம் ஏற்பட்டிருக்கும் இச்சமயத்தில், மத்தியதர வகுப்பினர் வலிய வந்து அதற்கு உதவி செய்வார்களாயின், அவநம்பிக்கை மறைந்துவிடும்; ஆயுதங்கள் வைத்துக்கொள்ளுவதற்கு இருக்கும் தடையும் ரத்தாகிவிடும். கமிஷனர் இதைப்பற்றிக் குறிப்பிட்டு, எங்களுக்குள் அபிப்பிராய பேதமிருந்தும் நான் மகாநாட்டிற்கு வந்ததைப் பாராட்டினார். ஆகவே, என்னால் முடிந்த வரையில் மரியாதையுடன் என் கட்சியிலிருக்கும் நியாயத்தை நான் எடுத்துக் கூறவேண்டியதாயிற்று.

வைசிராய்க்கு நான் எழுதிய மேலே குறிப்பிட்டிருக்கும் கடிதம் இதுவே:

26-ஆம் தேதி (ஏப்ரல்) தங்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில் கண்ட காரணங்களைப்பற்றிக் கவனமாகச் சிந்தித்ததன் பேரில் நான் மகாநாட்டிற்கு வரமுடியாமல் இருக்கிறது என்பதை அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், அதன் பிறகு நீங்கள் எனக்கு அளித்த பேட்டிக்குப் பின்னர் மகாநாட்டில் கலந்து கொள்ளுவது என்று என்னையே திடப்படுத்திக்கொண்டேன். இதற்கு வேறு காரணமில்லாது போயினும், தங்களிடம் நான் கொண்டிருந்த பெரும் மதிப்பே அதற்குக் காரணம். மகாநாட்டிற்கு வருவதில்லை என்று நான் எண்ணியதற்கு ஒரு காரணம் முக்கியமான காரணம் பொதுஜன அபிப்பிராயத்தை உருவாக்குவதற்கு அதிகச் சக்தி வாய்ந்த தலைவர்கள் என்று நான் கருதும் லோகமான்ய திலகர், ஸ்ரீ மதி பெஸன்ட், அலி சகோதரர்கள் ஆகியவர்களை அம்மகாநாட்டிற்கு அழைக்காதது தான். மகாநாட்டிற்கு வருமாறு அவர்களை அழைக்காது போனது பெரிய தவறு என்றே நான் இன்னும் கருதுகிறேன். அதைத் தொடர்ந்து மாகாண மகாநாடுகள் நடக்கப் போகின்றன என்று அறிகிறேன். அந்த மகாநாடுகளுக்காவது வந்து, அரசாங்கத்திற்கு ஆலோசனை கூறி உதவுமாறு அத்தலைவர்கள் அழைக்கப்படுவார்களானால், நடந்துவிட்ட தவறை நிவர்த்தித்துக் கொள்ள வழி ஏற்படும் என்ற யோசனையைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இத்தலைவர்கள், ஏராளமான பொதுமக்களின் பிரதிநிதிகளாக உள்ளவர்கள்.

அரசாங்கத்துடன் மாறுபட்ட கருத்துள்ளவர்களாக அவர்கள் இருந்த போதிலும், எந்த அரசாங்கமும் தலைவர்களை அலட்சியம் செய்துவிட முடியாது என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். மகாநாட்டின் கமிட்டிகளில் எல்லாக் கட்சிகளும் தங்கள் அபிப்பிராயத்தைத் தாராளமாக எடுத்துக்கூற அனுமதிக்கப்பட்டது என்பது அதே சமயத்தில் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. என்னைப் பொறுத்த வரையில், நான் இருந்த கமிட்டியிலோ, மகாநாட்டிலோ, வேண்டுமென்றேதான் நான் என் அபிப்பிராயத்தைக் கூறாமல் இருந்துவிட்டேன். மகா நாட்டில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு என் ஆதரவை அளிப்பதோடு இருப்பது மாத்திரமே, மகாநாட்டின் நோக்கத்திற்குச் சிறந்த சேவை செய்ததாகும் என்று கருதினேன். அதையே மனப்பூர்வமாகச் செய்தேன். என்னுடைய உதவித் திட்டம் ஒன்றை இத்துடன் தனிக் கடிதத்தில் அனுப்பியிருக்கிறேன். அதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதுமே மகாநாட்டில் நான் கூறியதைக் காரியத்தில் சீக்கரத்தில் நிறைவேற்றலாம் என நம்புகிறேன். மற்றக் குடியேற்ற நாடுகளைப் போன்று நாங்களும், சாம்ராஜ்யத்துடன் கூடிய சீக்கிரத்தில் பங்காளிகளாக ஆகி விட வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஆகையால், இந்தச் சாம்ராஜ்யத்திற்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் இச்சமயத்தில், இப்பொழுது நாங்கள் அளிக்கத் தீர்மானித்திருப்பது போன்று, எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் பூரணமான ஆதரவை அளிக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொள்ளுகிறேன். இவ்வாறு உதவி செய்ய முன்வந்திருப்பதற்குக் காரணம், இன்னும் அதிக விரைவில் நமது லட்சியத்தையடைய முடியும் என்று எதிர்பார்ப்பதுதான் என்பதே உண்மை. அந்த வகையில் கடமையைச் செய்வதானாலும், அப்படிச் செய்வோர், அதே சமயத்தில் உரிமையையும் தானே பெறுகின்றனர். ஆகையால், சீக்கிரத்தில் வரப்போவதாக உங்கள் பிரசங்கத்தில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அரசியல் சீர்திருத்தங்கள், முக்கிய அம்சங்களில் காங்கிரஸ்-லீக் திட்டத்தை அனுசரித்தவையாக இருக்கும் என்று எண்ண மக்களுக்கு உரிமை உண்டு. இந்த நம்பிக்கையே அரசாங்கத்திற்கு மனப்பூர்வமான ஒத்துழைப்பை மகாநாட்டில் அளிக்கும்படி பலரைச் செய்தது என்பதில் சந்தேகமில்லை. முன் வைத்த காலைப் பின் வாங்கிக் கொள்ளும்படி என் தேச மக்களைச் செய்ய என்னால் முடியுமானால், காங்கிரஸ் தீர்மானங்களையெல்லாம் அவர்கள் வாபஸ் வாங்கிக் கொண்டு, யுத்தம் நடந்து கொண்டிருக்கும் வரையில் சுயாட்சி, பொறுப்பாட்சி என்ற பேச்சைப் பேசக்கூடாது என்று சொல்லி, அவர்கள் அவ்விதமே செய்யும்படியும் செய்வேன்.

சாம்ராஜ்யத்திற்கு நெருக்கடியான சமயம் ஏற்பட்டிருக்கும் இந்த நேரத்தில், உடல் வலுவுள்ள தம் புதல்வர்கள் எல்லோரையும் இந்தியா, சாம்ராஜ்யத்திற்குத் தியாகம் செய்துவிட முன்வரும்படியும் செய்வேன். இச்செய்கை ஒன்றினாலேயே, சாம்ராஜ்யத்தில் இந்தியா அதிகச் சலுகைகளுடன் கூடிய பங்காளியாகிவிடுவதோடு நிறபேதங்களெல்லாம் என்றோ இருந்தவை என்றாகிவிடும் என்பதையும் நான் அறிவேன். ஆனால், அனுபவத்தில் படித்த இந்தியர் எல்லோருமே இதைவிடக் குறைந்த பலனுள்ள முறையையே தீர்மானித்திருக்கின்றனர். பொதுமக்களிடையே படித்த இந்தியருக்கு எந்தவிதமான செல்வாக்குமே இல்லை என்று சொல்லிவிடுவது இனியும் சாத்தியமானதன்று. நான் தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பியது முதல் விவசாயிகளுடன் மிகவும் நெருங்கிய தொடர்பு வைத்துக் கொண்டு வருகிறேன். சுயாட்சி ஆர்வம் அவர்களிடையேயும் அதிகமாகப் பரவியிருக்கிறது என்பதை உங்களுக்கு உறுதியாகக் கூற விரும்புகிறேன். சென்ற காங்கிரஸ் மகாநாட்டிற்குப் போயிருந்தேன். பார்லிமெண்டு நிறைவேற்றும் சட்டத்தின் மூலம் திட்டமாகத் தேதியைக் குறிப்பிட்டு, அந்தக் காலத்திற்குள் பிரிட்டிஷ் இந்தியாவுக்கு முழுப் பொறுப்பாட்சியும் அளித்து விட வேண்டும் என்று காங்கிரஸில் தீர்மானம் நிறைவேறியதில் என் பங்கும் உண்டு. அதைச் செய்வது தைரியமான காரியமே என்பதை ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனால், சாத்தியமான அளவு குறைந்த காலத்திற்குள் சுயாட்சியை அடைய முடியும் என்ற திட்டமான எண்ணம் ஏற்படுவதைத் தவிர வேறு எதுவும் இந்திய மக்களைத் திருப்தி செய்யாது என்பதை நிச்சயமாக அறிகிறேன். இந்த லட்சியத்தை அடைவதற்குச் செய்யும் எந்தத் தியாகமும் பெரியதாகாது என்று எண்ணுகிறவர்கள் இந்தியாவில் அநேகர் இருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன்.

அதே சமயத்தில் எந்தச் சாம்ராஜ்யத்தில் முடிவான அந்தஸ்தை அடைய நினைக்கிறார்களோ, விரும்புகிறார்களோ அந்தச் சாம்ராஜ்யத்திற்காகத் தங்களையே தியாகம் செய்யவும் தயாராக இருக்கவேண்டும் என்பதையும் விழிப்புடன் அவர்கள் அறிந்தே இருக்கிறார்கள். ஆகவே, சாம்ராஜ்யத்தை மிரட்டி வரும் அபாயத்திலிருந்து அதைக் காப்பாற்றுவதற்காக மௌனமாகவும் மனப்பூர்வ மாகவும் பாடுபடுவதனால் லட்சியத்தை நோக்கிச் செல்லும் நமது பிரயாணத்தைத் துரிதப்படுத்திவிடலாம் என்று ஆகிறது. சாதாரணமானதான இந்த உண்மையை அறியாது போவது தேசியத் தற்கொலையே ஆகும். சாம்ராஜ்யத்தைக் காப்பாற்றுவதற்கு நாம் பணிபுரிந்தால், அப்பணியிலேயே நாம் சுய ஆட்சியை அடைந்தவர்களாகிறோம் என்பதை நாம் கண்டுகொள்ள வேண்டும். ஆகையால், சாம்ராஜ்யத்தின் பாதுகாப்புக்கு நாம் அழைக்கக் கூடிய ஒவ்வொருவரையும் அழைக்க வேண்டும் என்பது எனக்குத் தெளிவாகிறது. ஆனால், பொருளுதவியைப் பொறுத்த வரையில் அவ்வாறு நான் சொல்ல முடியாது என்றே அஞ்சுகிறேன். இந்தியா, தன்னுடைய சக்திக்கு அதிகமாகவே சாம்ராஜ்யத்தின் பொக்கிஷத்திற்குக் கொடுத்திருக்கிறது என்று, விவசாயிகளிடம் நான் கொண்டிருக்கும் நெருங்கிய தொடர்பினால் நிச்சயமாகக் கருதுகிறேன். நான் இவ்விதம் கூறுவது, என் நாட்டு மக்களின் பெரும்பான்மையோரின் அபிப்பிராயத்தைக் கூறுவதாகும் என்பதை அறிவேன்.

டில்லியில் நடந்த யுத்த மகாநாடு, பொதுவானதோர் லட்சியத்திற்காக எங்கள் வாழ்க்கையை அர்ப்பணம் செய்து கொள்ளுவதில் ஒரு முக்கியமான காரியம் என்று நான் கருதுகிறேன். எங்களில் மற்றும் பலரும் அவ்வாறே கருதுகிறார்கள் என்றே நம்புகிறேன். ஆனால், எங்கள் நிலைமையோ மிகவும் விசித்திரமானது. இன்று நாங்கள் சாம்ராஜ்யத்தில் சம பங்காளிகளாக இல்லை. வருங்காலத்தில் அவ்வாறு ஆகலாம் என்ற நம்பிக்கையின் பேரில் எங்களை அர்ப்பணம் செய்திருக்கிறோம். அந்த நம்பிக்கை என்ன என்பதைத் தெளிவாகவும் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையிலும் உங்களுக்கு நான் கூறாது போனால், உங்களுக்கும் என் நாட்டிற்கும் உண்மையாக நடந்துகொண்டவனாக மாட்டேன். அது நிறைவேற்றப் பட வேண்டும் என்பதற்காக நான் பேரம் பேசவில்லை. ஆனால், நம்பிக்கையில் ஏமாற்றம் என்பது, நம்பிக்கையையே ஒழிப்பதாகும் என்பதை நீங்கள் அறிய வேண்டும் இன்னுமொரு விஷயத்தையும் நான் சொல்லாமல் இருக்கக் கூடாது. நமது சொந்த வித்தியாசங்களையொல்லாம் மறந்து விடுமாறு எங்களை நீங்கள் கேட்டுக்கொண்டீர்கள். அதிகாரிகளின் கொடுமைகளையும் அக்கிரமங்களையும் சகித்துக் கொள்ள வேண்டும் என்பதும் உங்கள் வேண்டுகோளுக்குப் பொருள் என்றால், அதற்கு இணங்க நான் அசக்தனாவேன். கட்டுப்பாடான கொடுமையை நான் கடைசிவரை எதிர்த்தே தீருவேன். ஒருவரைக் கூடத் துன்புறுத்தக் கூடாது என்றும், இதற்கு முன்னால் செய்து வந்ததைப் போல் அல்லாமல் பொதுஜன அபிப்பிராயத்தை மதித்து அவர்களைக் கலந்து ஆலோசித்து நடக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அந்த வேண்டுகோள் கூற வேண்டும்.

சம்பாரணில் நெடுங்காலமாக இருந்துவந்த கொடுமையை எதிர்த்ததன் மூலம், பிரிட்டிஷ் நீதியின் முடிவான சிறப்பை நான் காட்டியிருக்கிறேன். கேடாவில் அரசாங்கத்தை மக்கள். சபித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், இன்றோ உண்மைக்காகத் துன்பங்களை அனுபவிக்கவும் தாங்கள் தயாராகும்போது சக்தி தாங்களே அன்றி அரசாங்கம் அல்ல என்பதை அதே மக்கள் இப்பொழுது உணருகிறார்கள். ஆகவே, அம்மக்களிடமிருந்து மனக்கசப்பு மறைந்து வருகிறது. அநீதிகளை உணரும்போது ஒழுங்கான, மரியாதையான சட்ட மறுப்பை மக்கள் ஆட்சி சகிப்பதால் அரசாங்கம் மக்களின் அரசாங்கமாகவே இருக்க வேண்டும் என்று அம்மக்கள் தங்களுக்குத் தாங்களே சொல்லிக்கொள்கின்றனர். இவ்விதம் சம்பாரண், கேடாக் காரியங்கள், யுத்தத்திற்கு நான் நேரடியாக, திட்டமாகச்செய்த விஷேச உதவிகளாகும். அத்துறையில் என்னுடைய நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு கேட்பது, என் உயிரையே நிறுத்தி வைத்துவிடுமாறு நீங்கள் கேட்பதாகும், மிகுந்த பலத்திற்குப் பதிலாக ஆன்ம சக்தியை, அதாவது அன்பின் சக்தியை எல்லோரும் அனுசரிக்கும்படி நான் செய்ய முடியுமானால், உலகம் முழுவதும் அதனால் முடிந்ததை யெல்லாம் செய்தாலும், அதையும் எதிர்த்து நிற்கக்கூடிய இந்தியாவை உங்களுக்கு நான் காட்ட முடியும்.

ஆகையால், துன்பத்தைச் சகிப்பது என்னும் இந்த நிரந்தரமான தருமத்தை என் வாழ்க்கையில் வெளிக்காட்டும் வகையில் என்னையே நான் கட்டுத்திட்டங்களுக்கு உட்படுத்திக் கொள்ளுவேன். அதில் சிரத்தையுள்ளோரெல்லாம் இத்தருமத்தை ஏற்றுக்கொள்ளுமாறு உபதேசிப்பேன். நான் வேறு ஏதாவது நடவடிக்கைகளில் ஈடுபடுவேனாயின், அதன் நோக்கம் இந்தத் தருமத்தின் இணையில்லாத உயர்வைக் காட்டுவதற்கே ஆகும். கடைசியாக முஸ்லிம் ராஜ்யங்கள் சமபந்தமாகத் திட்டமான வாக்குறுதியை அளிக்குமாறு பிரிட்டிஷ் மந்திரிகளை நீங்கள் கேட்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஒவ்வொரு முகம்மதியரும் இவைகளில் ஆழ்ந்த சிரத்தை கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஹிந்து என்ற வகையில் நான் அவர்களுடைய விஷயத்தில் அசட்டையாக இருந்துவிடக்கூடாது. அவர்களுடைய துயரங்கள் எங்கள் துயரங்களாகவே இருக்க வேண்டும். அந்த ராஜ்யங்களின் உரிமைகளை முற்றும் மதிப்பதிலும், முஸ்லிம்களின் புண்ணிய ஸ்தலங்கள் சம்பந்தமாக அவர்களுடைய உணர்ச்சிகளை மதிப்பதிலும், சுயாட்சி சம்பந்தமான இந்தியாவின் கோரிக்கையை நியாயமாகவும் தக்க காலத்திலும் நிறைவேற்றி வைப்பதிலுமே சாம்ராஜ்யத்தின் பாதுகாப்பு இருக்கிறது. ஆங்கில நாட்டு மக்களை நான் நேசிக்கிறேன். ஆங்கிலேயரிடம் ஒவ்வோர் இந்தியருக்கும் விசுவாசத்தை உண்டுபண்ண வேண்டும் என்று விரும்புகிறேன். அதனாலேயே இதை எழுதுகிறேன்.

 
மேலும் ஐந்தாம் பாகம் »
temple news

முதல் அனுபவம் அக்டோபர் 10,2011

நான் தாய்நாட்டிற்கு வந்து சேருவதற்கு முன்னாலேயே போனிக்ஸிலிருந்து புறப்பட்டவர்கள் இந்தியா சேர்ந்து ... மேலும்
 
temple news
கவர்னர் என்னைப்பார்க்க விரும்புகிறார் என்று நான் பம்பாய் வந்து சேர்ந்ததுமே கோகலே எனக்குத் தகவல் ... மேலும்
 
temple news
புனாவிலிருந்து ராஜ்கோர்ட்டுக்கும் போர்பந்தருக்கும் போனேன். காலஞ்சென்ற என் சகோதரரின் மனைவியையும் ... மேலும்
 
temple news

சாந்திநிகேதனம் அக்டோபர் 10,2011

ராஜ்கோட்டிலிருந்து சாந்திநிகேதனத்திற்குச் சென்றேன். அங்கே ஆசிரியர்களும் மாணவர்களும் என்னை அன்பில் ... மேலும்
 
temple news
மூன்றாம் வகுப்புப் பிரயாணிகள், டிக்கெட்டுகளை வாங்குவதற்கும்கூட என்ன கஷ்டங்களையெல்லாம் அனுபவிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar