பதிவு செய்த நாள்
14
டிச
2016
11:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தொடர்ந்து பெய்த மழையால், மஹா தீபத்தை காண முடியாமல் பக்தர்கள் தவித்தனர். நேற்று காலை, தீபம் தெரிந்ததும் தரிசனம் செய்தனர். தீபம் ஏற்றுவதை காண மலை மீது ஏறிய பக்தர்கள், கொட்டும் மழையால் இறங்க முடியாமல் தவித்தனர். கமாண்டோ படை வீரர்கள் கயிறு கட்டி அவர்களை பத்திரமாக இறக்கினர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவில், நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, அண்ணாமலையால் மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. நேற்று முன்தினம் மதியம், 3:00 மணிக்கு துவங்கிய மழை நேற்று அதிகாலை, 4:00 மணி வரை தொடர்ந்தது. இதனால், மலை உச்சியில் மேகம் சூழ்ந்திருந்ததால், மஹா தீபம் தெரியாமல் பக்தர்கள் தவித்தனர். இரவு முழுவதும் பக்தர்கள் காத்திருந்த நிலையில், நேற்று காலை, 7:30 மணிக்கு மஹா தீபம் தெளிவாக தெரிந்தது. அப்போது பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் மாலை, மஹா தீபம் ஏற்றுவதை பார்க்க, லட்சக்கணக்கான பக்தர்கள் மலை உச்சிக்கு சென்றனர். அப்போது மழை கொட்டியதால், மஹா தீபம் ஏற்றி முடிந்தவுடன் கீழே இறங்க வழி தெரியாமல், பாறை வழுக்குபகுதியில் சிக்கி பக்தர்கள் சிரமப்பட்டனர். அப்போது, மலையின் கீழ் பகுதியிலிருந்து மலை உச்சி வரை, பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த கமாண்டோ படை வீரர்கள், கயிறை மரங்களில் கட்டி, அதை பிடித்துக் கொண்டு பாதுகாப்பாக பக்தர்கள் இறங்க உதவினர். இருள் சூழ்ந்திருந்ததால், பேட்டரி விளக்கில், இறங்கும் வழிக்கு வெளிச்சம் காண்பித்தனர். நேற்று காலை, 8:23 மணி முதல் இன்று காலை, 6:23 வரை பவுர்ணமி உள்ளதால், நேற்று இரண்டாவது நாளாக தொடர்ந்து பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேற்று இரவு, 10:00 மணிக்கு அய்யங்குளத்தில், அருணாசலேஸ்வரர் சமேத உண்ணாமுலையம்மன் தெப்ப உற்சவம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மஹா தீப திருவிழாவில், பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக, இரண்டு குட்டி விமானங்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்தது. ஆனால், திடீரென மழை கொட்டியதால், குட்டி விமானம் பழுதாகிவிடும் என்பதால், போலீசார் அதை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவில்லை.