பதிவு செய்த நாள்
26
டிச
2016
12:12
திண்டுக்கல்: பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 20 நாட்களே இருப்பதால், திண்டுக்கல்லில் பொங்கல் பானைகள் விற்பனைக்காக அதிகளவில் தயாராகி வருகின்றன. திண்டுக்கல், டி.பாறைப்பட்டியில் தயாராகும் மண் பாண்டங்கள் உறுதியாகவும், நேர்த்தியாகவும் தரமாகவும் இருப்பதால், வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநிலத்திலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அந்தந்த சீசனுக்கு ஏற்ப மண்பாண்டங்கள் தயாரித்து விற்பனை செய்வது திண்டுக்கல்லின் தனி சிறப்பு.
குறையாத மவுசு: காலம் மாறினாலும் பாரம்பரியத்தை விரும்புவோருக்காக மண்பானைகள் இன்றும் தயாரிக்கப்படுகின்றன. கிராமங்களில் மாட்டுப் பொங்கல் வெகு விமரிசையாக கொண்டாடுவர். அப்போது வீட்டு வாசல் மற்றும் மாட்டு தொழுவில் வைத்து விவசாயிகள் பாரம்பரியமாக மண் அடுப்புகளில் மண் பானைகளை வைத்து பொங்கல் கொண்டாடுவர். சொல்லப்போனால் இவர்களுக்காகவே மண்பானைகள் தயாரிப்பு முடங்கி விடாமல் நடந்து வருகிறது. பொங்கலுக்கு இன்னும் 20 நாட்களே இருப்பதால் அதற்காக மண்ணால் செய்யப்பட்ட பொங்கல் பானைகள், அடுப்புகள், பாத்திரங்கள் வேகவேகமாக தயாராகி வருகின்றன.
ஸ்பெஷல் பானைகள்: அரைப்படி முதல் ஐந்து படி வரை வேகும் அளவுக்கு வெவ்வேறு அளவுகளில் தயாராகி வருகின்றன. சாதாரண மண் பானை ரூ.75 முதல் ரூ.300 வரை, அளவிற்கேற்ப விற்பனை செய்யப்படுகிறது. விதவித வண்ணமயமான ஓவியம், கோலம் வரைந்த ஸ்பெஷல் பொங்கல் பானை ரூ.300 முதல் ரூ.600 வரைக்கும் விற்கப்படுகிறது. அவை ஆர்டர் கொடுத்தால் மட்டுமே கிடைக்கும். இதனை தலைப் பொங்கல் கொண்டாடும் தம்பதிகளுக்கு பரிசாக வழங்குவர். இதற்காக, ஒரு மாதம் முன்பே ஆர்டர் கொடுத்து விடுகின்றனர்.
உற்பத்தி குறைவு: திண்டுக்கல்லில் தயாராகும் பொங்கல் பானைகள் கரூர், திருச்சி, சேலம், மதுரை, நெல்லை மாவட்டத்திற்கும், கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. வியாபாரி கணேசன் கூறியதாவது: கடந்த 3 ஆண்டுகளாகவே மண் அள்ள தடை, தண்ணீர் பற்றாக்குறை, உற்பத்தி செலவு ஆகியவற்றால் இத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், திண்டுக்கல் பானைகளுக்கு பொங்கல் மவுசு இருப்பதால் கஷ்டங்களை தாண்டி ஜீவனுடன் உள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு, விலைவாசி அதிகரிப்பால் இந்தாண்டு பொங்கல் பானை ரூ.25 விலை அதிகரித்துள்ளது, என்றார்.