பதிவு செய்த நாள்
31
டிச
2016
02:12
விழுப்புரம்: அனுமன் ஜெயந்தியை யொட்டி, மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்தது. அனுமன் ஜெயந்தியை யொட்டி விழுப்புரம் திரு.வி.க., வீதியிலுள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.
சுவாமிக்கு வடமாலை, தங்கக்கவசம் சாற்றப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விக்கிரவாண்டி வீர ஆஞ்சநேயர் கோவிலில், சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலையில், வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். இதேபோல், விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் ஸ்ரீஅச்சுத ஆஞ்சநேயர் கோவிலில் 27 அடி உயர சுவாமி சிலைக்கு பால் அபிஷேகம் நடந்தது. திண்டிவனம் ராஜாங்குளக் கரையிலுள்ள ஆஞ்சநேயர் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வடைமாலை, வெற்றிலை தோரணத்துடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கள்ளக்குறிச்சி சேலம் சாலையில் உள்ள ஹனுமன் கோவிலில், சுவாமிக்கு 108 வடைமாலை, 1008 வெற்றிலை மாலை அணிவிக்கப்பட்டது. இதேபோல் நீலமங்கலம் கோதண்டராமர் கோவிலிலும், விருகாவூர் சர்க்கரை விநாயகர் சீனிவாச பெருமாள் கோவிலிலும் ஹனுமன் ஜெயந்தி நடந்தது. சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூரில் உள்ள ஆஞ்சநேய சுவாமிக்கு, 200 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. பின், சந்தனகாப்பு சாற்றப்பட்டு, வடைமாலை அணிவிக்கபட்டது. திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகரில் உள்ள, சுந்தர ஆஞ்சநேயர் கோவிலில், திருமஞ்சனம், வெண்ணைகாப்பு அலங்காரம் நடந்தது. கிழக்கு வீதியில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் வெண்ணைக்காப்பு அலங்காரம் நடந்தது. அவலுார்பேட்டை ஏரியில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு செந்துார காப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடந்தது. இதே போல் பெத்தான் குளக்கரை பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமி வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.