ஸ்ரீராமகிருஷ்ணமடத்தில் ஜனவரி 1 கல்பதரு தின கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31டிச 2016 05:12
1886, ஜனவரி 1. பகவான் ராமகிருஷ்ணர் அன்று தமது சீடர்களும் பக்தர்களும் அச்சத்திலிருந்து விடுதலை அடையவும், நாம் அனைவரும் தெய்விக ஆனந்தம் பெறவும் தமது அருளைப் பொழிந்து தம்மை ஓர் அவதாரமாக வெளிப்படுத்திக் கொண்டார்.
இந்த மகத்தான நிகழ்வு மேற்குவங்காளம் காசிப்பூர் தோட்டத்தில் குருதேவர் சிகிச்சை பெற்றுவந்த அவரது இறுதிநாட்களில் நடந்தது. அன்று பிற்பகல் சுமார் 3 மணிக்கு குருதேவர் உடல்நிலை சற்றுநன்றாக இருந்தது. தமது அறையிலிருந்து தோட்டத்தில் உலாவச் சென்றார். 30-க்கும் மேற்பட்ட சீடர்கள் கூடத்திலும் தோட்டத்திலும் இருந்தனர். பக்தர்களுடன் ஸ்ரீராமகிருஷ்ணர் மாமரத்தை அடைந்தபோது அங்கிருந்த கிரீஷ்சந்திரகோஷ் என்ற பக்தரிடம், கிரீஷ், என்னிடம் எதைக்கண்டு நீ இவ்வாறு (நான்அவதாரபுருஷன்என்று) கூறிக்கொண்டு திரிகிறாய்? என்று கேட்டார். கிரீஷ் கூப்பியகரங்களுடன் குருதேவரின் திருப்பாதங்களின் முன்மண்டியிட்டு, மாமுனிவர்களான வியாசர், வால்மீகி போன்றவர்களால் கூடயாருடைய பெருமையை விளக்க முடியவில்லையோ, அவரைப்பற்றி நான் என்ன சொல்ல முடியும்? என்று நாத்தழுதழுக்கக் கூறினார். இதைக் கேட்டதும் குருதேவருக்கு மயிர்க்கூச் செறிந்தது. மனம்உயர, உயரப் பறந்தது.
அவர் சமாதிநிலையில் ஆழ்ந்தார். சற்றுப்புறவுணர்வு திரும்பியதும், இன்னும் நான்என்ன கூறுவது? உங்கள் அனைவருக்கும் ஆன்மிக விழிப்பு உண்டாகட்டும் என்றார். குருதேவரின் இந்த அபயவாக்கு பக்தர்களிடம் பேருணர்ச்சிகளை எழுப்பியது. தம்மிடம் வந்த பக்தர்கள் அனைவரையும் தொட்டு ஆசீர்வதித்தார். அவரது புனித ஸ்பரிசத்தால் ஒவ்வொருவருக்கும் அற்புத அனுபவங்கள் உண்டாயின. இந்த அவதாரத் திருவிளையாடல் மேலும் பலருக்கு அருள்புரிய மீண்டும் நிகழ்ந்தது. மிக முக்கியத்துவம் வாய்ந்த இத்தருணத்தை - குருதேவர் கற்பகவிருட்சமாக அருள்வழங்கிய தினத்தை - க்தர்கள் கல்பதரு தினம் என்றுகூறி மகிழ்ந்தனர். ஸ்ரீராமகிருஷ்ணமடம் -மிஷன் மையங்களில் அந்தப் புனிததினம் அவ்வாறே கொண்டாடப்படுகிறது.