பறவைகளின் அரசன் என்பதால் கருடனுக்கு பட்சி ராஜன் என்று பெயர். இதைக் கண்டாலும், அதன் குரல் கேட்டாலும் புண்ணியம் என்பதை, காருடதர்சனம் புண்யம் ததோபித்வ நிருச்யமாதோ என்கிறது ஒரு ஸ்லோகம். திருமாலுக்கு சேவை செய்யும் அடியவர்களுக்கு நித்யசூரிகள் என்று பெயர். இவர்களில் முதன்மையானவராக கருடன் கருதப்படுகிறார். ஆதிமூலமே என்று அழைத்த கஜேந்திரனுக்கு அருள்புரிய திருமால் கருடன் மீதேறி விரைந்து வந்ததாக பாகவதம் கூறுகிறது. திருமாலின் வாகனமான இவருக்கு, பெருமாள் கோவில்களில் கருவறை எதிரில் சன்னிதி இருக்கும். இந்த கருட வாகனத்திற்கும் வாகனம் இருப்பதை சுபர்ணோ வாயு வாஹனா என்று விஷ்ணு சகஸ்ரநாமம் கூறுகிறது.காற்றை வாகனமாகக் கொண்ட கருடனே என்பது இதன் பொருள். கண்ணுக்கு தெரியாத கார் போல, காற்றை வாகனமாகக் கொண்டவர் இவர்.