பழநி: இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் பழநி மாரியம்மன் கோயிலுக்கு புதிய தேர் செய்யும் பணியை, மாசித் திருவிழாவிற்குள் முடிக்க வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். பழநி ஞானதண்டாயுதபாணி சுவாமி கோயில் நிர்வாகத்திற்குபட்ட கிழக்குரத வீதி மாரியம்மன்கோயிலுக்கு வெள்ளி கிழமை மற்றும் விழாக்காலங்களில் உள்ளூர், வெளியூரைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இக்கோயிலுக்கு என தனியாக தேர் இல்லாததால் மாசி மாத மாரியம்மன் கோயில் தேரோட்டத்தின்போது, பெரியநாயகியம்மன் கோயில் தேரையே பயன்படுத்துவர். 2014ல் மாரியம்மன் கோயிலுக்கென புதியத்தேரை ரூ.18லட்சம் செலவில் தயாரிக்க முடிவு செய்தனர். அதன்படி, 14.3 அடிஉயரம், 9.8 அடி நீளம் கொண்ட தேர் சாஸ்திர விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணி 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் முடியாமல் உள்ளது. பணிகளை விரைவுபடுத்தி வரும் மாசி திருவிழாவில் புதுத்தேரை பயன்படுத்தும் வகையில் பணியை முடிக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர். கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், “தேர் அமைக்கும் பணியில் 80 சதவீத பணிகள் முடிந்து விட்டது. சிற்பவேலைப்பாடு பணிகளை விரைவாக நடந்து வருகிறது. மாசித் திருவிழாவில் புதுத்தேரை வெள்ளோட்டம் பார்க்க திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.