பதிவு செய்த நாள்
05
ஜன
2017
12:01
ஈரோடு: மாரியம்மன் கோவில் திருவிழாவால், வீரப்பன் சத்திரம் தெப்பக்குளம் தூய்மையானது. ஈரோடு, வீரப்பன்சத்திரம் மையப்பகுதியில், 1,000 ஆண்டுகள் பழமையான தெப்பக்குளம் உள்ளது. மழை காலம், கோடை காலம் என, எல்லா பருவத்திலும் தண்ணீர் ஊற்று இருந்து கொண்டே இருக்கும். சரியான பாதுகாப்பு இல்லாத காரணத்தால், இரவு நேரத்தில் குளத்தின் படிகளில், சமூக விரோதிகள் தங்கி தகாத செயல்களில் ஈடுபட்டனர். இது குறித்து, நமது நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதன் பயனாக, பத்து லட்சம் ரூபாய் செலவில், கம்பி வேலி அமைக்க நிதி ஒதுக்கி பணி நடந்து வருகிறது. ஆனால், குளத்தின் படிகள், தேங்கியுள்ள தண்ணீர் அசுத்தமாக இருந்தது. தற்போது மாரியம்மன் கோவில் திருவிழா கம்பம் இந்த குளத்தில் விடப்பட உள்ளதால், குப்பை அகற்றப்பட்டு, படிகளுக்கு வெள்ளையடிக்கப்பட்டுள்ளது. விழா சமயத்தில் மட்டுமின்றி, எல்லா சமயத்திலும் குளத்தை பாதுகாத்து, பராமரித்து வந்தால் சுத்தமான, நிலத்தடி நீர் கிடைக்கும். மேலும் குளத்தின் முன் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள, தள்ளுவண்டி கடைகளை அகற்றினால், குப்பை சேராது.