உடுமலை:உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற பல நூதன வழிகளை கையாண்டு வரும் வேட்பாளர்கள் இம்முறை கிராம கோவில்களுக்கு நன்கொடை அளித்து வாக்காளர்களுடன் ஒப்பந்தம் போட்டு வருகின்றனர். இந்த நடைமுறையை தடுக்க வழியில்லாததால் சிக்கன வேட்பாளர்கள் திணறி வருகின்றனர்.உள்ளாட்சி தேர்தலில், ஊராட்சி தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியிடங்களுக்கு போட்டி அதிகமாக நிலவுகிறது. இப்பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள் தேர்தலுக்கு முன்பாகவே தனியாக பந்தல் அமைத்து சாப்பாடு, பிரியாணி மற்றும் மது வகைகளை வழங்குவது வழக்கமாக உள்ளது. அனைவரிடமும் பரிசுப்பொருட்களை வாங்கி கொள்ளும் வாக்காளர்கள் எந்த பக்கம் ஆதரவு அளிப்பார்கள் என்பது தெரியாத நிலை உள்ளது. இத்தகைய நடவடிக்கைளால் திருப்தியடையாத வேட்பாளர்கள் இறுதியாக கிராம கோவில்களின் பக்கம் தங்கள் பார்வையை திருப்பியுள்ளனர். கிராமப்பகுதிகளில் உள்ள காவல் தெய்வங்கள் மற்றும் இதர கோவில்களுக்கு உதவி செய்பவர்கள் மீது கிராம மக்கள் என்றும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியதில்லை. இந்த கருத்தை முக்கிய வியூகமாக கொண்டு வேட்பாளர்கள் தாங்கள் வெற்றி பெற்றால் கிராம கோவில்களை புதுப்பித்து தருவோம்; எனவே அனைவரும் தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.சமுதாய கோவில்களை சார்ந்தவர்களில் பொறுப்பாளர்களை சந்தித்து 50 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்ச ரூபாய் வரை நன்கொடையாக வழங்கி ஓட்டுக்காக சத்தியம் வாங்கும் நிலையும் உள்ளது. புதிதாக கோவில் கட்டுவது, பழைய கோவில்களுக்கு கும்பாபிஷேகம், பராமரிப்பு பணிகள் என அனைத்து பணிகளுக்கும் நிதி வழங்கப்படுகிறது. உடுமலை, குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள 30 க்கும் அதிகமான ஊராட்சிகளில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.வலுவான வேட்பாளர்கள் கோவிலுக்கு நிதி அளிக்கும் நிலையில், செலவு செய்ய முடியாத நிலையில் இருப்பவர்கள் இந்த நூதன ஒப்பந்தத்தை முறியடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இவ்வாறு, உள்ளாட்சி தேர்தலால் கிராம கோவில்களுக்கு புத்துயிர் கிடைத்து வருகிறது.