பதிவு செய்த நாள்
10
ஜன
2017
11:01
வேட்டவலம்: வேட்டவலம் ஜமீன் பங்களா கோவிலில், மரகதலிங்கம் திருடு போனது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் கிராமத்தில், ஜமீன் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான மனோன்மணியம் அம்மன் கோவில், ஜமீன் பங்களா வளாகத்தில் உள்ளது. இங்கு, அரை அடி உயர மரகதலிங்கம் இருந்தது; இது, விலை மதிக்க முடியாதது. தினமும் அம்மனுக்கும், மரககதலிங்கத்திற்கும் பூஜை நடக்கும். சண்முகம் சிவாச்சாரியார் என்பவர், 10 ஆண்டுகளாக, இக்கோவிலில் பூஜை செய்து வருகிறார். நேற்று முன்தினம், வழக்கம் போல் பூஜை முடித்து, நடையை சாத்தி சென்றார். நேற்று அதிகாலை, கோவிலை திறந்த போது, மரகதலிங்கம் மாயமாகி இருப்பது கண்டு திடுக்கிட்டார். ஜமீன்தார் மகேந்திர பந்தாரியாருக்கு தகவல் தெரிவித்தார். அவர் வந்து பார்த்த போது, மரகதலிங்கம், அதன் மேல் சாத்தப்படும் வெள்ளி நாகாபரணம், அம்மன் வெள்ளி கிரீடம், தங்க தாலி, வெள்ளி இடுப்பு ஒட்டியாணம் ஆகியவை திருடு போனது தெரிய வந்தது. எஸ்.பி., பொன்னி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த மரகதலிங்கம், 1986ல் திருடு போன போது, மூன்று நாட்களில் போலீசார் கண்டுபிடித்து மீட்டனர். தற்போது, இரண்டாவது முறையாக திருடு போயுள்ளது.