பதிவு செய்த நாள்
12
ஜன
2017
10:01
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், நேற்று ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதில், மஹா தீப மை பிரசாதம் சுவாமிக்கு சாற்றப்பட்டு பூஜை நடந்தது. ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதையொட்டி, அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாச்சலேஸ்வரர் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, ஆயிரங்கால் மண்டபத்தில், நடராஜர், சிவகாமசுந்தரி அம்மன் எழுந்தருளினர். அங்கு, நடராஜர் மற்றும் சிவகாமி சுந்தரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. பின், டிச., 12ல், 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்ட மஹா தீப கொப்பரையிலிருந்து எடுக்கப்பட்ட தீப மை பிரசாதம், முதலில் நடராஜருக்கும், சிவகாமிசுந்தரி அம்மனுக்கும் சாற்றப்பட்டு, தீபாராதனை நடந்தது. இதையடுத்து, திருமஞ்சன கோபுர வாயில் வழியாக நடராஜரும், சிவகாமசுந்தரி அம்மனும் மாட வீதியில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, நேற்று அதிகாலையில் இருந்தே, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.