பதிவு செய்த நாள்
12
ஜன
2017
12:01
திருத்தணி : திருத்தணி முருகன் உபகோவில்களில், நேற்று, ஆருத்ரா விழாவையொட்டி, மூலவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் உற்சவர் வீதியுலா நடந்தன. திருத்தணி முருகன் கோவிலில், ஆருத்ரா விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம், இரவு, 10:00 மணி முதல், நள்ளிரவு, 12:00 மணி வரை, மலைக்கோவில் உள்ள ஏகாம்பர ஈஸ்வரர் சன்னதியில், மூலவருக்கு பல்வேறு பழங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சண்முகப்பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதே போல், முருகன் கோவிலின் உபகோவிலான மத்துார் அகத்தீஸ்வரர் கோவிலில், நேற்று, ஆருத்ரா விழாவையொட்டி, நேற்று, அதிகாலை, 3:00 மணி முதல், காலை, 6:00 மணி வரை, நடராஜ பெருமானுக்கு அண்ணாச்சி, திராட்சை, கொய்யா, பேரீச்சம், மாதுளம், ஆப்பிள், சாத்துக்குடி உட்பட, 15 வகையான பழங்களால், சிறப்பு அபிஷேகம் நடந்தன.
தொடர்ந்து, நடராஜ பெருமான் சிறப்பு அலங்காரத்தில் மாட்டு வண்டியில் மத்துார் கிராமம் முழுவதும் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதே போல், திருத்தணி, சுந்தர விநாயகர் கோவிலில், ஆருத்ரா விழாவையொட்டி, நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, நடராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில், மாட்டு வண்டியில் திருத்தணி நகரில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதே போல், அருங்குளம் கிராமத்தில், அகத்தீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா விழாவையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. உற்சவர் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.