பதிவு செய்த நாள்
16
ஜன
2017
10:01
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், திருவூடல் விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை, கிரிவலப்பாதையில் பிருங்கி மகரிஷி முனிவர், பராசக்தி அம்மனை வழிபட மறுத்து, சிவனை மட்டும் நினைத்து தவம் இருந்தார். அவருக்கு காட்சி அளிக்க அருணாசலேஸ்வரர் கிரிவலம் செல்வார். பராசக்தி அம்மன், தன்னை வணங்காத பிருங்கி மகரிஷி முனிவருக்கு காட்சி அளிக்க செல்லக்கூடாது என்று அருணாசலேஸ்வரரிடம் கூறுவார். ஆனால் அதையும் மீறி அவர் செல்வார். அதனால் சுவாமிக்கும், அம்மனுக்கும் திருவூடல் ஏற்படும். இந்த நிகழ்ச்சி, நேற்றிரவு, 8:00 மணிக்கு நடந்தது. அப்போது, சுந்தர மூர்த்தி நாயனார் தூதுவராக சென்று, அருணாசலேஸ்வரையும், பராசக்தி அம்மனையும் சமாதானப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில், அருணாசலேஸ்வரர் கிரிவலம் செல்லும் பாதை நெடுகிலும் மண்டகப்படி செலுத்தி பக்தர்கள் வழிபட்டனர்.