சபரிமலை: ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று காலை ஒரு ஆண்டுக்கான மேல்சாந்தி குலுக்கல் தேர்வு நடைபெறுகிறது. ஐப்பசி மாத பூஜைகளில் தொடக்கமாக நேற்று மாலை 5.30 மணிக்கு மேல்சாந்தி சசிநம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். வேறு எந்த பூஜைகளும் நடைபெறவில்லை. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் நடத்தினர். இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து நிர்மால்ய தரிசனமும், நெய்யபிஷேகமும் நடைபெறுகிறது. தந்திரி கண்டரரு மகேஸ்வரரு தலைமையில் கணபதிஹோமம் நடைபெறுகிறது. காலை 7.30க்கு உஷபூஜை நிறைவு பெற்றதும் புதிய மேல்சாந்தி தேர்வு நடைபெறும். திருவிதாங்கூர் தேவசம்போர்டு இண்டர்வியூ மூலம் தேர்வு செய்தவர்கள் பட்டியிலில் இருந்து ஒருவர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுகிறார். இதில் கேரள தேவசம்போர்டு அமைச்சர் சிவகுமார் மற்றும் தேவசம்போர்டு நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இதே முறையில் மாளிகைப்புறம் மேல்சாந்தியும் தேர்வு செய்யப்படுகிறார்.கார்த்திகை 1ம் தேதி முதல் ஒரு ஆண்டு காலத்துக்கு இந்த பதவியில் இருப்பார். இன்று முதல் ஐந்து நாட்களும் மதியம் உச்சபூஜைக்கு முன்னோடியாக சகஸ்ரகலச பூஜையும், களபாபிஷேகமும், இரவு 7 மணிக்கு படி பூஜையும் நடைபெறுகிறது. 22ம் தேதி இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படும்.
சபரிமலை மேல்சாந்தி தேர்வு: சபரிமலை மேல்சாந்தியாக பாலமுரளி என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சபரிமலை மேல்சாந்தியாக தேர்வு செய்யப்படுவதற்காக குலுக்கல் முறை நடந்தது. இதில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பாலமுரளி என்பவர் சபரிமலை மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் மாளிகைபுரம் கோயிலுக்கும் நம்பூதிரி தேர்வு நடந்தது.