தொடர் விடுமுறையால் பழநிக்கு படையெடுத்த பாதயாத்திரை பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜன 2017 11:01
பழநி : பொங்கல் தொடர் விடுமுறையால் பழநி மலைக்கோயிலில் குவிந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய நான்கு மணிநேரம் தினமும் காத்திருந்தனர். தைப்பூசவிழா மற்றும் சபரிமலை சீசன் காரணமாக பழநி மலைக்கோயில் ஞானதண்டாயுதபாணிசுவாமியை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வழக்கமாக சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது பொங்கல் தொடர் விடுமுறையால் தென்மாவட்டங்களில் இருந்து ஏராளமான பாதயாத்திரை பக்தர்கள் பழநிக்கு வந்தனர். இதனால் ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் இரண்டு மணிநேரம் காத்திருந்தனர். மலைக்கோயில் பொது தரிசன வழியில் பக்தர்கள் நான்குமணிநேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர்.
வெளிபிரகாரத்தில் வழிபாடு: அதிக கூட்ட நெரிசல் காரணமாக மேற்குபிரகாரம் தீ ஸ்தம்பம் அருகே தேங்காய், பழம் உடைத்து கற்பூரம் ஏற்றி மூலவரை பல பக்தர்கள் வழிபட்டனர். இரவு 7 மணி தங்கரத புறப்பாட்டை காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
போலீசார் பற்றாக்குறை: கிரிவீதிகள், அடிவார ரோட்டின் இருபுறத்தை ஆக்கிரமித்து நுாற்றுக்குமேற்பட்ட தள்ளுவண்டிகள், பழக்கடைகள், தட்டு வியாபாரிகள் வியாபாரம் செய்கின்றனர். இதனால் பாதவிநயாகர்கோயில், பூங்காரோடு, அய்யம்புள்ளிரோடு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பக்தர்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிப்பட்டனர். தைப்பூச சீசன் முடியும் வரை கூடுதலாக போலீசாரை நியமித்து போக்குவரத்து நெரிசலை சீரமைக்க நடவடிக்கை தேவை.