பதிவு செய்த நாள்
18
ஜன
2017
12:01
வேலுார்: திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில் கும்பாபிஷேகம், பிப்., 6ல் நடக்கிறது. இதையொட்டி, கிரிவலப் பாதையில் உணவு சமைக்க தடையும்,அன்னதானம் வழங்க அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
அதன் விபரம் வருமாறு: * கிரிவலப் பாதையில் அன்னதானம் செய்ய விரும்புவோர் வரும், 19- முதல் பிப்., 2க்குள் அனைத்து வேலை நாட்களிலும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்து, அனுமதி பெற வேண்டும்* விண்ணப்பத்துடன், ஐந்து பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், முகவரி சான்று, எத்தனை பேருக்கு அன்ன தானம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்பதுஉள்ளிட்ட, விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்* கிரிவலப் பாதையில், உணவு சமைக்கக் கூடாது; அன்னதானம் வழங்க, தயாரிக்கப்பட்ட உணவை மட்டுமே வழங்க, அனுமதி அளிக்கப்படும். உணவுப் பொருட்கள் தரமானதாகவும், துாய்மையான தாகவும் இருக்க வேண்டும்* பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது; அன்னதானம் வழங்க, இலை, தொன்னை, பாக்கு மட்டை ஆகிய பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் * அன்னதானம் வழங்கும் இடத்தில், குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும்; அன்னதானம் முடிந்த பின், அந்த இடத்தை, அன்னதானம் வழங்கியவரே சுத்தம் செய்ய வேண்டும்.
வாடிக்கை வேடிக்கை : திருவண்ணாமலையில், ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தின் போது, இதே மாதிரியான கட்டுப்பாட்டை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பது வாடிக்கை. ஆனால், கோவிலை சுற்றியும், கிரிவலப் பாதையிலும், சாப்பிட்ட தட்டுகளும், தொன்னைகளும், ஆங்காங்கே சிதறிக் கிடக்கும். அன்னதானம் வழங்க கட்டுப்பாடு விதிப்பதோடு மட்டுமல்லாது, அதை கண்காணிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், அறிவிப்போடு நின்று, வேடிக்கை பார்க்காமல், உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பு.