பதிவு செய்த நாள்
18
ஜன
2017
12:01
உடுமலை: பாதயாத்திரையாக பழநிக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்கள், தேசிய நெடுஞ்சாலையை தேர்ந்தெடுத்து பயணிப்பதால், விபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. பாதயாத்திரையாக சென்று இறைவனை வணங்கும் முறை சமீபத்தில் அதிகரித்துள்ளது. முற்காலத்தில், வாகனங்கள் இல்லாத சூழ்நிலையில், பக்தர்கள் தெற்கிலிருந்து இமயமலை வரையும், இமயத்திலிருந்து பொதிகை வரையும் உள்ள தலங்களை நடந்து சென்றுதான் தரிசித்து வந்தனர். இதே வழக்கம் இப்போதும் தொடர்கிறது. காலச்சூழ்நிலை கருதி, குறுகிய இடத்திற்குள்ளேயே பாதயாத்திரை செல்கின்றனர். குறிப்பாக, பழநி, திருப்பதி ஆகிய புனித தலங்களுக்கு பாதயாத்திரை செல்வோர் அதிகமாவர். பழநி கோவிலில், வரும் பிப்., 9ல், தைப்பூச திருவிழா கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம் கோவிலில் தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும் என்பதால் பிற மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள், பாதயாத்திரையாக சென்ற வண்ணம் உள்ளனர்.
இவர்களில் பலர், நடப்பதற்கு ஏதுவாக தேசிய நெடுஞ்சாலையை தேர்ந்தெடுக்கின்றனர். ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, பாத யாத்திரையாக செல்லும் பக்தர்கள், திருப்பூர்- - பழநி, காங்கயம் --தாராபுரம், -பொள்ளாச்சி -உடுமலை சாலையை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, 5 முதல், 20 பேர் வரை குழுவாகவே, இவர்கள் பாதயாத்திரை செல்கின்றனர். நடந்து செல்லும் நாட்களுக்கு உண்டான உணவை, வழியில் காணப்படும் அன்னதான திடல் மற்றும் தன்னார்வ அமைப்பினர் உதவியுடன் பூர்த்தி செய்து கொள்கின்றனர். பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாய் இருப்பதால், இந்நேரத்தை ஓய்வாக மாற்றி, மாலை மற்றும் நள்ளிரவு நேரங்களில் நடந்து செல்கின்றனர். நெடுஞ்சாலையோரம் செல்லும் பக்தர்களை, அசுர வேகத்தில் செல்லும் வாகனங்கள் அச்சுறுத்தி வருகின்றன. அதேசமயம், பக்தர்களின் நள்ளிரவு நேர பயணம், தொலை துாரத்துக்கு இயக்கப்படும் அரசு பஸ் டிரைவர்களுக்கு சவாலாகவே இருந்து வருகிறது. பக்தர்கள் பாதுகாப்பு கருதி, மித வேகத்தில் இயக்கப்படுவதால், குறித்த நேரத்தில், குறிப்பிட்ட ஊரைச் சென்றடைவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும், அவ்வபோது விபத்து ஏற்படும் நிலை உருவாவதாகவும் டிரைவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். போக்குவரத்து நிறைந்த சாலைகளில், விபத்து ஏற்படுவதை தடுக்க, வாகன ஒளியில் மின்னும் ரிப்ளக்டர் ஸ்டிக்கரை பக்தர்கள் எடுத்துச் செல்லும் பைகளில் ஒட்டினால், அவர்களை எளிதில் கண்டறிந்து, விபத்தை தடுக்கலாம் என அறிவுறுத்துகின்றனர்.