கொழும்பு: இலங்கையில் உள்ள பழமை வாய்ந்த இந்து கோயிலை புனரமைக்க இந்தியா 326 மில்லியன் இலங்கை ரூபாய்களை நிதியாக வழங்கவுள்ளது. இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் உள்ள திருகேதீஸ்வரம் கோயில் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இலங்கையில் தமிழ் கலாச்சாரத்தை பறைசாற்றும் முக்கிய அடையாளமாக இக்கோயில் விளங்கி வருகிறது. இந்நிலையில், இக்கோயிலை புனரமைக்க இந்தியா மற்றும் இலங்கை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. இதன்படி, இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி மையம், தொல்பொருள் மற்றும் சிற்பக்கலை கல்லூரி மற்றும் இந்திய ஐகமிஷன் உதவியுடன் இக்கோயில் மேம்படுத்தப்படவுள்ளது. இதற்காக இந்தியா சார்பில் 326 மில்லியன் இலங்கை ரூபாய் நிதியாக வழங்கப்படவுள்ளது.