பதிவு செய்த நாள்
30
ஜன
2017
11:01
சென்னை:கிருஷ்ணகிரி மாவட்டம், நாகமங்கலத்தில், 12ம் நுாற்றாண்டு கால நடுகற்கள், சிதிலமடைந்து வருவது சமூக ஆர்வலர்களை கவலை அடையச் செய்துள்ளது. அந்த நடுகற்களை பாதுகாக்க, தமிழக அரசு, சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டம் ஒன்றியம், கெலமங்கலத்தில் இருந்து, ராயக்கோட்டை செல்லும் சாலையில், 10 கி.மீ., துாரத்தில் உள்ளது நாகமங்கலம். இங்கு, 12ம் நுாற்றாண்டை சேர்ந்த நடுகல் தொகுப்பு இருப்பதும், தற்போது, அவை சிதிலமடைந்து வருவதும் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து, அங்கு கள ஆய்வு நடத்திய, கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று தேடல் குழுவின் அமைப்பாளர், அறம் கிருஷ்ணன் கூறியதாவது: கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்ட மக்கள், பொங்கல், மாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கல் நாட்களில், மூதாதையர்களின் நடுகல்லுக்கு, குடும்பத்துடன் படையல் இட்டு வணங்குவது வழக்கம். இந்த பழக்கம், 2,000 ஆண்டுகளாக, நடைமுறையில் இருந்து வருவதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதனால், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், நடுகற்கள் அதிகம் காணப்படுகின்றன. நாகமங்கலம் அரசு பள்ளி அருகே ஒரு நடுகல் உள்ளது. அதிலுள்ள வீரனின் வலது கையில் போர்வாள் உள்ளது. அது, முகத்திற்கு நேராக மடக்கி பிடித்த நிலையில் உள்ளது. இடது கையில் உள்ள வாள், துாக்கி பிடித்த நிலையில் உள்ளது. வீரனின் முதுகில், அம்புகளின் தொகுப்பு உள்ளது. மேலும், வீரனின் இடையில் குறுவாளும், கால்பகுதியின் கீழ், மூன்று கால்நடைகளும் செதுக்கப்பட்டுள்ளன. அதன் அருகே, நிற்கும் நிலையில், இரு உருவங்களும், அமர்ந்த நிலையில் வணங்கும் பெண் உருவமும் உள்ளது. மேற்பகுதியிலும் சில உருவங்கள் உள்ளன. எல்லா சிற்பங்களுமே சிதைந்துள்ளன.
அரசு பள்ளியின் மேற்கு திசையில், நான்கு நடுகற்கள் உள்ளன. அவற்றில், இரு நடுகற்கள், காண முடியாதபடி சாய்ந்துள்ளன. ஒரு நடுகல் உடைந்து, சிற்பங்கள் சிதைந்த நிலையில், கொல்லையில் கிடக்கிறது. இது, போரில் இறந்த ஒரு வீரனின் நடுகல். குதிரையில் அமர்ந்து சண்டையிடுவது போலவும், பின்புறம், மூன்று வீரர்கள் இருப்பது போலவும் வடிவமைப்பு உள்ளது. வீரனின் கால் பகுதியில், அடையாளம் காண முடியாத நிலையில், சிதிலமடைந்த நான்கு சிற்பங்கள் உள்ளன. வீரனின் தலை உடைந்துள்ளது. வீரனின் முன்புறம், ஒரு பெண், அமர்ந்து வணங்குவது போல் உள்ளது. அடுத்த, 1 கி.மீ., துாரத்தில், சாலையின் இடதுபுறம், நுட்பமாக செதுக்கப்பட்ட ஒரு குதிரை வீரனின் நடுகல் உள்ளது. அங்கு வசிக்கும் மக்கள், இதை வேடியப்பன் சிலையாக வணங்கி வருகின்றனர். இந்த ஆறு நடுகற்களும், வெள்ளை கற்களில் செதுக்கப்பட்டுள்ளன. இவை, மழை, வெயில் உள்ளிட்ட இயற்கை சூழல்களால் பாதிக்கப்படுவதால், அவற்றை, தொல்லியல் துறை சேகரித்து, பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.