சமூக விரோதிகளின் பிடியில் சமணர் பள்ளி: வரலாற்று சின்னங்கள் சிதைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜன 2017 11:01
மேலுார்: மேலுார் அருகே கருங்காலக்குடி சமணர் பள்ளியில் சமூக விரோத செயல்களால் நடப்பதால், வரலாற்று சிறப்புமிக்க இடம் புனிதத்தன்மையை இழந்து வருகிறது. இந்த சமணர் பள்ளியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சமண முனிவர்கள் தங்கி ஆன்மிகம் மற்றும் கல்வி தொண்டு புரிந்துள்ளனர். இதற்கு சான்றாக பிராமிய எழுத்துக்களால் ஆன தமிழ் கல்வெட்டுக்கள் உள்ளது. இக் குகையின் அருகில் உள்ள பாறையில் சமண தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்றும் அதன் கீழ் தமிழ் வட்டெழுத்துக்களில் எழுதப்பட்ட கல்வெட்டும் உள்ளது.
மேலும் பாறையில் செதுக்கப்பட்ட படிக்கட்டுகளும், சாப்பாட்டு தட்டுகளும், மூலிகை ஓவியங்களும் உள்ளது. வரலாற்று முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் நான்கு வழிச்சாலை மற்றும் பள்ளி முன் வைக்கப்பட்ட பதாகைகள் பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்துள்ளது. இப் பள்ளியை பாதுகாக்கும் வகையில் தொல்லியல் துறையினர் முன்பகுதியில் கேட் போட்டுள்ளனர். ஆனாலும் சமூக விரோத செயல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இப்பகுதியை சேர்ந்த சரவணன் கூறியதாவது: - வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடத்தில் காவலாளி இல்லாததால் சமண தீர்த்தங்கரர் சிலை முன் மதுகுடித்தல் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடக்கிறது. மேலும் அடுப்பு வைத்து அசைவ விருந்தும் நடக்கிறது. பராமரிப்பு இல்லாததால் மூலிகை ஓவியங்கள் சிதிலமடைந்து வருகிறது, என்றார். தொல்லியல் துறையினர் இந்த பள்ளியின் பாதுகாப்பை பலப்படுத்தி சுற்றுலா தலமாக மாற்றி வருங்கால சந்ததிக்கு வரலாற்று முக்கியத்துவத்தை எடுத்துரைக்க வேண்டும்.