பதிவு செய்த நாள்
30
ஜன
2017
12:01
நெமிலி: ஊராட்சியில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அம்பாள் ஈஸ்வரர் கோவில், பராமரிப்பின்றி கிடப்பதால், இடியும் நிலையில் உள்ளது. கோவிலை புதுப்பிக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர். திருவாலங்காடு ஒன்றியம், நெமிலி கிராமத்தில் வேதமல்லீஸ்வரி சமேத அம்பாள்ஈஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், 1,000 ஆண்டுகள் பழமையானது. தினசரி ஒரு காலபூஜையும், மாதங்களில் இருமுறை வரும் பிரதோஷம், ஐப்பசி மாத பவுர்ணமி அன்னாபிஷேகம் மற்றும் மகா சிவராத்தரி போன்ற விழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. மேலும், இக்கோவிலுக்கு வெளியூர் பக்தர்களும் குடும்பத்துடன் அவ்வப்போது வந்து மூலவரை தரிசிப்பர். இந்நிலையில், முறையாக கோவிலை பராமரிக்காததால் கோபுரம், மற்றும் அதன் சுவர்களில் செடிகள் வளர்ந்தும் விரிசல் அடைந்துள்ளன. இதுதவிர, மழை பெய்யும் போது கோவில் வளாகம் மற்றும் மூலவர் சன்னிதியிலும் மழைநீர் ஒழுகி தண்ணீர் தேங்கிநிற்கும். அந்த நேரங்களில் மூலவருக்கு பூஜைகள் நடத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, பழுதடைந்து வரும் அம்பாள் ஈஸ்வரர் கோவிலை புதுப்பிக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் மற்றும் பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.