பதிவு செய்த நாள்
30
ஜன
2017
01:01
அவலுார்பேட்டை : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், அடிப்படை வசதிகள் குறித்து, அறநிலையத் துறை அமைச்சர் மற்றும் சட்ட அமைச்சர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுாரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை; எனவே, அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தை தடை செய்ய வேண்டும் என, செஞ்சி மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதன்பேரில், ஊஞ்சல் உற்சவத்திற்கு, இடைக்கால தடை விதித்து கோர்ட் உத்தரவிட்டது. தடை உத்தரவை நீக்க கோரி, இந்து சமய அறநிலையத் துறை சார்பில், 27ம் தேதி மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, ஊஞ்சல் உற்சவத்திற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, கடந்த 2௭ம் தேதி இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இந்நிலையில், நேற்று மாலை 3:30 மணிக்கு, மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் அடிப்படை வசதிகளின் நிலை குறித்து, அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், சட்டத் துறை அமைச்சர் சண்முகம் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, குடிநீர் வசதி, பக்தர்கள் தங்கும் இடம், கொடிமரம் மற்றும் கழிவறைகளை பார்வையிட்டனர். மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் கஜேந்திரன், பிரகாஷ், தாசில்தார் மணிகண்டன், பி.டி.ஓ., அறவாழி, அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் புண்ணியமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.