பதிவு செய்த நாள்
31
ஜன
2017
10:01
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா, கடந்த, 26ல் துர்க்கையம்மன் உற்சவத்துடன் துவங்கி நடந்து வருகிறது. பிப்., 6ல் கும்பாபிஷேகம் நடக்கிறது.
நேற்று அருணாச்சலேஸ்வரர் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. பின், தங்க கொடி மரம் முன் உள்ள சம்பந்த விநாயகர் சன்னிதி முன், யாக குண்டம் அமைத்து, நான்கு திசைகளையும் வழிபடும் வகையில் திசா பூஜை, மஹா கும்பாபிஷேகம் நடத்தும் சிவாச்சாரியார்கள் நலன் வேண்டி, ஆசார்யவரண பூஜை, சம்ஹிதாஹோமம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை, 5:00 மணிக்கு, முதல் கால யாக பூஜை துவங்குகிறது. அப்போது, யாக சாலையில் அருணாச்சலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். கும்பாபிஷேகம் நடக்கும் வரை சுவாமியும், அம்மனும், யாக சாலையிலேயே இருப்பதால், மூலவர் சன்னிதியில் சுவாமி, அம்மன் தரிசனம் நிறுத்தப்படுகிறது என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. விழாவையொட்டி, கோவில் விழாக் கோலம் பூண்டுள்ளது.