பதிவு செய்த நாள்
31
ஜன
2017
12:01
சேலம்: சேலம், சுகவனேஸ்வரர் கோவில் வளாகத்தில், ஷெட்கள் தயாராகும் நிலையில், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து, இடத்தை மீட்பதில் சிரமம் ஏற்படும் என்பதால், பழைய தேரை இடமாற்றம் செய்யாமல் இருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். சேலத்தில், வைகாசி விசாகத்தின்போது, சுகவனேஸ்வரர், கோட்டை அழகிரிநாதர் கோவில்களில், தேரோட்டம் நடக்கும். இரு கோவில் தேர்கள் பழுதானதால், 2014 முதல், தேரோட்டம் நடக்கவில்லை. நடப்பாண்டு தேரோட்டம் நடத்த, தலா, 46 லட்சம் ரூபாய் செலவில், இரு கோவில்களுக்கும், மரத்தேர் தயார் செய்யும் பணி நடக்கிறது. ஆனால், தேரடியில் நிறுத்தப்பட்டுள்ள பழைய தேர்கள், இரண்டு ஆண்டுகளாக, போக்குவரத்துக்கு இடையூறாக கடை வீதியில் நிலை கொண்டுள்ளன. அவற்றை இடமாற்றம் செய்ய, தேர் கலைநயம், சிற்ப கலை பெருமையை, எதிர்கால சந்ததியினர் அறிய, சுகவனேஸ்வரர் கோவில் வளாகத்தில், ஆறு லட்சம் ரூபாய் செலவில், தேர்களை, கண்ணாடி ஷெட்டில் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஷெட்டும் தயாராகிறது. இடம் மாற்றினால், தேர்கள் நிறுத்தப்பட்டுள்ள இடத்தை, வியாபாரிகள் ஆக்கிரமிப்பர். அவர்களை வெளியேற்றுவது கடினம் என்பதால், தேர் இடமாற்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கடைவீதியில், இரு கோவில்களின் தேர்களும், சுகவனேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பட்டா நிலத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. மாறாக, மாநகராட்சி, மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் நிறுத்தப்படவில்லை. அதேநேரம், தேர்கள் நிறுத்தப்பட்டதால், அங்குள்ள விநாயகருக்கு, தேரடி விநாயகர் என, பெயர் இருந்தது. பின், ராஜகணபதியாக பெயர் மாற்றம் பெற்றார். தேரடி என்ற பெயர் உள்ளதால்தான், இரு தேர்களும் அங்கு நிறுத்தப்படுகின்றன. அதை சுற்றி, வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ள நிலையில், அங்கிருந்து தேரை அகற்றினால், அந்த இடம் முழுவதும், ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கும். அவர்களை அகற்றுவது பெரும்பாடாகிவிடும். தற்போது, வைகாசி விசாகத்தின்போது, புதிய தேர் மூலம் தேரோட்டம் நடத்த தயாராகிறோம். புதிய தேர்கள், அங்கு கொண்டு செல்லப்பட்டால், பழைய தேர்கள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டுவிடும். மேலும், தேர்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆக்கிரமிப்பை அகற்றினாலே, நெரிசல் குறையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.