ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை பாதையை ஆக்கிரமித்து வியாபாரிகள் கடை விரித்துள்ளதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர். ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் பல்லாயிர கணக்கான பக்தர்கள் வந்துசெல்கின்றனர். பாதுகாப்பு கருதி கோயில் ரதவீதிகளில் வாகனங்கள் நுழைய 2014 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரதவீதிகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. பக்தர்கள் எளிதில் சென்று தரிசனம் செய்கின்றனர். சுவாமி, அம்மன் வீதியுலாவும் நெரிசல் இன்றி சுலபமாக நடக்கிறது. இந்நிலையில் ரதவீதிகளில் உள்ள நடைபாதைகளை வியாபாரிகள் ஆக்கிரமித்து கடை விரித்துள்ளனர். உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் வியாபாரிகளும் கடை வைத்துள்ளதால் பக்தர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. மேலும் நெரிசல் அதிகரித்துள்ளதால் எளிதில் கோயிலுக்குள் செல்ல முடியாத நிலை பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் ரதவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.