பதிவு செய்த நாள்
02
பிப்
2017
02:02
திருப்பூர் : பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, திருப்பூர் ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவி லில், ஸ்ரீ ஹயக்கிரீவருக்கு சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடைபெறவுள்ளன. ஸ்ரீ ஹயக்கிரீவர், எம்பெருமானின் ஒரு வடிவம். "ஹயம் என்றால் குதிரை; குதிரை முகம் கொண்டவர். மது, கைபவர் என்ற அரக்கர்கள், நான்கு வேதங்களையும், கடக்கு அடியில் மறைத்து வைத்தனர். குதிரை முக வடிவம் எடுத்த எம்பெருமான், கடக்குள் சென்று, நான்கு வேதங்களையும் மீட்டதாக, புராணம் கூறுகிறது.
ஆயக்கலைகள் அனைத்துக்கும், கல்வி உள்ளிட்ட செல்வங்களுக்கும் அதிபதியாக குறிப்பிடப்படும் ஸ்ரீ ஹயக்கிரீவர், திருப்பூர் ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவி லில், ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவராக, தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார். இக்கோவிலில், திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில், 10 ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர் நலனுக்காக, ஆண்டுதோறும் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். மாணவர்கள், மிகுந்த நினைவாற்றடனும், தன்னம்பிக்கையுடனும் தேர்வை எதிர்கொள்ளவும், நல்ல தேர்ச்சிவிகிதம் பெறவும், ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவருக்கு விசேஷ பூஜைகள் நடத்தப்படுகிறது.அவ்வகையில்,வரும் 5 மற்றும், 12ம் தேதிகளில், பிளஸ் 2 மாணவர்களுக்காக, சிறப்பு யாகம் மற்றும் விசேஷ பூஜை நடக்கிறது. அன்று காலை, 9:00 மணிக்கு, சிறப்பு வேள்வி; 10:30க்கு, மூலவர் திருமஞ்சனம்; 11:00 மணிக்கு, நாம சங்கீர்த்தனம்; 11:30க்கு, சாத்துமறை மற்றும் மகா தீபாராதனை; 12:00 மணிக்கு, பிரசாத வினியோகம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பங்கேற்கும் மாணவ, மாணவியர்கள் பெயர், நட்சத்திரங்களுக்குடன் தனித்தனியே அர்ச்சனை செய்யப்படுகிறது.அதேபோல், வரும், 19 மற்றும் 26ம் தேதிகளில், 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, ஸ்ரீ ஹயக்கிரீவர் பூஜை நடக்கிறது. இதில், மாணவ, மாணவியர், பெற்றோர்களுடன் பங்கேற்கலாம் என்று, திருவடி திருத்தொண்டு அறக்கட்டளையினர் தெரிவித்துள்ளனர்.