நிலக்கோட்டை: நிலக்கோட்டையில் ஜமீன் காலத்து பெருமை வாய்ந்த பெருமாள் கோயில் தெப்பக்குளத்தை இளைஞர் அமைப்பினர் முட்கள், குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். நிலக்கோட்டையில் அகோபில நரசிம்ம பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான தெப்பக்குளம் உள்ளது. ஜமீன் ஆட்சியில் இந்த குளத்தில் ஆண்டு தோறும் தெப்பத்திருவிழா நடந்ததாக பதிவேடுகளில் பதிவாகி உள்ளன. காலப்போக்கில் நீர் கொடுக்கும் வரத்து வாய்க்கால்கள் காணாமல் போனதால் தெப்பக்குளம் கேட்பாறற்று இருந்தது. சீமை கருவேல முட்கள் அடர்ந்தும், திறந்தவெளி கழிப்பறையாக பயன்படுத்தபட்டது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தெப்பக்குளத்தை சுற்றி பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டது. குளத்திற்குள் முட்கள், குப்பைகள் அகற்றாமல் இருந்தன. நேற்று நிலவை நிழல்கள்-பார்ன் டு வின் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள், இளம் பெண்கள் ஒன்று சேர்ந்து முட்கள், குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். இளைஞர்களின் சமூக அக்கறையை இப்பகுதியினர் பாராட்டினர்.