பதிவு செய்த நாள்
04
பிப்
2017
12:02
காரைக்குடி: பழநி தைப்பூசவிழாவை முன்னிட்டு செட்டிநாட்டைச் சேர்ந்த நகரத்தார்கள், கண்டனுாரிலிருந்து எடுத்து வரப்பட்ட வைரவேலுடன் குன்றக்குடியிலிருந்து பாதயாத்திரையாக புறப்பட்டனர்.
காரைக்குடி, தேவகோட்டை, அரிமளம், கண்டனுார், புதுவயல் உள்ளிட்ட செட்டிநாட்டு பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட காவடிகள் குன்றக்குடி வந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பிப்.,3 காலை 8:30 மணிக்கு காவடி கிளம்பியது. கண்டனுார் சாமியாடி செட்டியார், காரைக்குடி அரண்மனை பொங்கல் பழனியப்ப செட்டியார் தலைமை வகித்தனர். காவடிக்கு முன்பாக மாட்டு வண்டியில் மிக பழமையான வைரவேல் எடுத்து செல்லப்பட்டது. பிப்.,4 காலை சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயிலில் காவடி தங்குதல். மதியம் மணப்பச்சேரி சென்று காவடி நிவேத்தியம். இரவு சமுத்திராபட்டி நகரத்தார் மடம் சென்று வேல் அபிஷேகம் அலங்காரம் மற்றும் வேல் பூஜை நடக்கிறது. வரும் 8ம் தேதி பழநியை அடைந்து, 11ம் தேதி காவடி சாத்துகின்றனர்.
நகரத்தார்கள் காவடியை குறிப்பிட்ட சில இடத்தில் மட்டுமே இறக்குகின்றனர். பாதயாத்திரையாக செல்லும் நகரத்தார், திரும்பவும் காரைக்குடிக்கு பாதயாத்திரையாகவே வருகின்றனர். இதே போல் செட்டிநாட்டை சேர்ந்த நுாற்றுக்கணக்கான நாட்டார் காவடியும் பழநிக்கு பாதயாத்திரையாக சென்றது.