பதிவு செய்த நாள்
08
பிப்
2017
02:02
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த தற்போது வசூலிக்கபடும் பார்க்கிங் கட்டணத்தை, பல மடங்கு உயர்த்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இக்கோயிலில் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த சொந்த இடம் இல்லாதநிலையில், நகராட்சிக்கு சொந்தமான ரோட்டில் தான் சைக்கிள்கள், டுவீலர்கள், ஆட்டோ, கார்கள் நிறுத்தபடுகிறது. இதற்கு சைக்கிளுக்கு 50 பைசா, ஸ்கூட்டருக்கு ஒரு ரூபாய், ஆட்டோக்கு இரண்டு ரூபாய், கார்,வேன்களுக்கு ரூ.3, பஸ்களுக்கு ரூ.5 என கட்டணம் நிர்ணயிக்கபட்டுள்ளது.
கட்டணம் குறித்த போர்டும் வைக்காமல், பார்க்கிங்கிற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கபடும்நிலையில் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி உள்ளது. அதாவது சைக்கிள் ரூ.2, ஸ்கூட்டர் ரூ.5, ஆட்டோ ரூ.10, கார் ரூ.40, வேன் ரூ. 60, பஸ்களுக்கு ரூ.100 என நிர்ணயம் செய்துள்ளனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை செய்து தராமல், நகராட்சிக்கு சொந்தமான ரோட்டில் நிறுத்தபடும் வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கே பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்துமுன்னணி சுப்பிரமணியன் கூறுகையில், ஏற்கனவே அறிவிப்பு பலகை இல்லாமல், இஷ்டத்திற்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதுவும் நகராட்சிக்கு சொந்தமான பொதுபயன்பாட்டு இடத்தில் நிறுத்தபடும் வாகனங்களுக்கு அறநிலையத்துறை பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதே வேதனைக்குரியது. இந்நிலையில் கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது கண்டனத்திற்குரியது ,என்றார்.