பதிவு செய்த நாள்
10
பிப்
2017
12:02
திருத்தணி : வள்ளலார் கோவிலில், நேற்று, தைப்பூச விழாவையொட்டி நடந்த ஜோதி தரிசனத்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருத்தணி, பெரியார் நகரில் உள்ள அருட்பிரகாச வள்ளலார் கோவிலில், நேற்று, தைப்பூசத்தையொட்டி, ஜோதி தரிசனம் நடந்தது. இதையொட்டி, காலை, 7:30 மணிக்கு, சன்மார்க்க கொடி உயர்த்தப்பட்டு, காலை, 8:00 மணிக்கு தீபாராதனையும், அகவல் பாராயணம் நடந்தது. மதியம், 12:00 மணிக்கு ஏழு திரை நீக்கி, ஜோதி தரிசனம் நடந்தது. அப்போது, அங்கு கூடியிருந்த, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் அருப்பெரும்ஜோதி, அருப்பெரும்ஜோதி என, முழக்கமிட்டனர். பின், பக்தர்கள் ஜோதி தரிசனத்தை கண்டு மகிழ்ந்தனர். மதியம், 2:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, பஜனை மற்றும் பக்தி பாடல்கள் பாடப்பட்டன. மாலை, 7:00 மணிக்கு, மகா தீபாராதனை நடந்தது.
பத்மாபுரம்: தைப்பூச திருநாளான நேற்று, வள்ளலார் சபைகளில், ஜோதி தரிசனம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தைப்பூசத் திருநாளான நேற்று, ஆர்.கே.பேட்டை ஒன்றியம், பத்மாபுரம் ஊராட்சியில், வாலாஜா சாலையில் அமைந்துள்ள, வள்ளலார் சபையில், ஜோதி தரிசனம் நடந்தது. காலை, 9:00 மணிக்கு, சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. மதியம், 12:00 மணிக்கு, ஜோதி தரிசனம் நடந்தது. இதில், ஆர்.கே.பேட்டை, பத்மாபுரம், சோளிங்கர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த, திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல், அத்திமாஞ்சேரிபேட்டை கல்யாண சுந்தரேசனார் கோவில் வளாகத்தில் உள்ள வள்ளலார் சபை, பொதட்டூர்பேட்டை, அம்மையார்குப்பம் உள்ளிட்ட இடங்களிலும், ஜோதி தரிசனம் நடந்தது.