பதிவு செய்த நாள்
13
பிப்
2017
10:02
பழநி: பழநி தைப்பூச திருவிழாவில் நேற்றிரவு பெரியநாயகியம்மன் கோயில் அருகேயுள்ள தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது. பழநி தைப்பூச திருவிழா பெரியநாயகியம்மன் கோயிலில் பிப்.,3ல் கொடியேற்றத்துடன் துவங்கி பிப்.,12வரை நடந்தது. திருவிழாவின் கடைசி நாளான நேற்று பெரியநாயகிம்மன் கோயில் அருகே உள்ள ஆயிரவாழ் செட்டிகள் தெப்பக்குளத்தின் மைய மண்டபத்திற்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினர். அங்கு கலசங்கள் வைத்து யாகமும், அபிஷேகம், மலர் அலங்காரத்துடன் மகாதீபாராதனை நடந்தது. அதன்பின் இரவு 8.25 மணிக்கு பல வண்ண மின்விளக்குகள், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் ஏற்றப்பட்டு குளத்தை மூன்று முறை வலம் வந்தார், சுவாமிக்கு மகாதீபாராதனையும், வானவேடிக்கைகள் நடந்தது. பக்தர்கள் பலர் பங்கேற்றனர். இரவு 11:00 மணிக்கு பெரிய நாயகியம்மன் கோயிலில் கொடி இறக்கத்துடன் தைப்பூச திருவிழா முடிந்தது. விழா ஏற்பாடுகளை இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் (பொ)மேனகா செய்தனர்.