பதிவு செய்த நாள்
14
பிப்
2017
01:02
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலில், தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தரிசனம் இன்றிரவு நடக்கிறது.இதையொட்டி பஸ்களுக்கு தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், சென்னிமலை முருகன் கோவில் தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்வான, மகா தரிசனம் இன்றிரவு நடக்கிறது. இதையொட்டி காலை, 10:00 மணிக்கு, கைலாசநாதர் கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத முத்துகுமாரசாமிக்கு சிறப்பு அபிஷேகம், மலர் அபிஷேகம் நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு, வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில், நடராஜர், சுப்பிரமணிய சுவாமி திருவீதி உலா நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, விடிய, விடிய சுவாமி தரிசனம் செய்வர். இரவு, 9:00 மணிக்கு துவங்கி, நான்கு ராஜா வீதிகளிலும் சுவாமி திருவீதி உலா நடக்கிறது. நாளை (15ம் தேதி) மஞ்சள் நீர் அபிஷேகத்துடன், 15 நாள் தேர் திருவிழா நிறைவடைகிறது.
விழாவை முன்னிட்டு, இன்று மாலை, சென்னிமலை டவுன் பகுதியில் வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. ஈரோடு - பெருந்துறை மார்க்கமாக செல்லும் பஸ்கள், பிராட்டியம்மன் கோவில் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தற்காலிக பஸ் ஸ்டாண்டுக்கு செல்லும். அரச்சலூர், கரூர் மார்க்கமாக செல்லும் பஸ்களுக்கு, அரச்சலூர் சாலையிலும், ஊத்துக்குளி மார்க்கமாக செல்லும் பஸ்களுக்கு, மேலப்பாளையத்திலும் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.