பதிவு செய்த நாள்
24
அக்
2011
10:10
திருநெல்வேலி : நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு அம்பாளுக்கு, சுவாமி காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இன்று அதிகாலையில் திருக்கல்யாண திருவிழா நடக்கிறது. நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 13ம் தேதி காந்திமதியம்பாள் சன்னதியில் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினந்தோறும் காலையிலும், மாலையிலும் காந்திமதியம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதியுலா நடந்தது.நேற்று முன்தினம் இரவு காந்திமதியம்பாள் சன்னதியில் இருந்து தங்க மூலாம் பூசப்பட்ட சப்பரத்தில் அம்பாள் கம்பை நதி காமாட்சி அம்மன் கோயில் மண்டபத்திற்கு எழுந்தருளி ஒற்றைக்காலில் தபசு இருந்தார்.நெல்லையப்பர் கோயிலில் இருந்து சுவாமி நேற்று பகலில் புறப்பட்டு காட்சி மண்டபத்திற்கு எழுந்தருளினார். சுவாமியுடன், நெல்லை கோவிந்தரும் எழுந்தருளினார். தங்கச் சப்பரத்தில் விபூதி அலங்காரத்தில் அம்பாள் வெண்பட்டு உடுத்தி சுவாமியை 3 முறை வலம் வந்தார். கம்பை நதி மண்டபத்தில் அம்பாளுக்கு சுவாமி காட்சிகொடுத்தல் வைபவமும், மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், ஒரே நேரத்தில் சுவாமி, அம்பாளுக்கு தீபாராதனை நிகழ்ச்சியும் நடந்தது.முன்னதாக சுவாமி சன்னதியில் நெல்லை கோவிந்தனுக்கும், சந்திவிநாயகர் சன்னதியில் அகஸ்தியருக்கும், திருஞான சம்பந்தர் தெருவில் ஞானசம்பந்தருக்கும் சுவாமி காட்சி கொடுத்தார். திருஞான சம்பந்தர் காட்சியின் போது சம்பந்தர் கோயில் அருகே பூஜாரிகள் பேரவை சார்பில் ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை கல்சுரல் அகடமி தலைவர் எம்.ஆர்.குணசேகரன் துவக்கிவைத்தார்.திருக்கல்யாண விழாவில் கோயில் செயல் அலுவலர் கசன் காத்த பெருமாள், முன்னாள் அறங்காவலர் செல்லையா, காசிவிஸ்வநாதன், முன்னாள் கவுன்சிலர் நமச்சிவாயம், அருண்குமார், வெங்கடசுப்பிரமணியன், பூஜாரிகள் பேரவை தலைவர் கார்த்திகேய குருக்கள், சுப்பையா, பேஸ்கார் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இன்று (24ம் தேதி) அம்பாள் சன்னதி ஆயிரங்கால் மண்டபத்தில் அதிகாலை 4.30 மணிக்கு மேல் 5 மணிக்குள் சுவாமி, அம்பாள் திருக்கல்யாண விழா நடக்கிறது. இதற்காக சுவாமி, அம்பாளுக்கு தங்க கிரீடம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.திருக்கல்யாண நிகழ்ச்சியை அனைத்து மக்களும் பார்க்க வசதியாக 3 இடங்களில் பிளாஸ்மா டிவி வைக்கப்பட்டுள்ளது. கோயில் முழுவதும் அலங்கார மின் விளக்கு வசதியும் செய்யப்பட்டுள்ளது.திருக்கல்யாண நிகழ்ச்சியை தொடர்ந்து 4 ரதவீதிகளில் சுவாமி அம்பாள் பட்டண பிரவேசமும் நடக்கிறது. 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை ஊஞ்சல் மண்டபத்தில் அம்பாள் ஊஞ்சல் திருவிழாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.